'தலைவர் என நிரூபிக்க சரியான நேரம்; இப்போதாவது செயல்படுங்கள்' - மோடிக்கு ராகுல் அறிவுரை

நாட்டின் தலைவர் என்று நிரூபிக்க சரியான நேரம், இப்போதாவது செயல்படுங்கள் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார். 
ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Published on
Updated on
2 min read

நாட்டின் தலைவர் என்று நிரூபிக்க சரியான நேரம், இப்போதாவது செயல்படுங்கள் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார். 

கரோனாவை ஆரம்பம் முதலே மத்திய அரசு சரியாக கையாளவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடர்ந்து மத்திய அரசை குற்றம்சாட்டி வருகிறார். மேலும், பிரதமர் மோடிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார். மத்திய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி தினமும் ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில், காணொலி வாயிலாக செய்தியாளர்களிடம் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: 

பிரதமர் நரேந்திர மோடிக்கு கரோனா பரவல் குறித்த சரியான புரிதல் இல்லை. அவரது அரசின் மோசமான நடவடிக்கையே கரோனா இரண்டாம் அலைக்கு காரணம். 

தற்போதைய வேகத்தில் தடுப்பூசி பயன்பாடு தொடர்ந்தால் நாட்டில் 'பல அலைகள்' இருக்கும்.

கரோனா முதல் அலை என்பது யாருக்கும் புரியவில்லை. ஆனால் இரண்டாவது அலை பிரதமரின் பொறுப்பு. அவர் தனது பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியதே இரண்டாவது அலைக்கு காரணம் என்று தெரிவித்தார். 

பிரதமரால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகளை சமாளிக்க முடியாது. நாட்டில் ஏதாவது நடந்தால் அந்த ஒரு  நிகழ்வை மட்டும் வைத்து சமாளிப்பார். பிரதமர் இந்த நாட்டை கையாளும் விதம் காரணமாகவே யாரும் அவருடன் பேசுவதில்லை. 

எங்களுக்குத் தேவை பயனுள்ள, விரைவான நிர்வாகம். பிரதமர் நாட்டின் தலைவராக இருக்கும் பிரதமரே மக்கள் நல்வாழ்வுக்கு பொறுப்பு.

தனது உருவத்தை சரிசெய்ய முயற்சிக்கும் அவருக்கு இப்போது உருவமே இல்லாமல் போய்விட்டது. பிரதமர் எழுந்து நின்று நாட்டை வழிநடத்தும் நேரம் இது. அவர் தனது தலைமை, தைரியம், வலிமை ஆகியவற்றைக் காட்ட வேண்டிய நேரம் இது. இந்த நேரத்தில் நீங்கள் எழுந்து நிற்க வேண்டும், செயலாற்ற வேண்டும். பயப்பட வேண்டாம். நீங்கள் ஒரு நல்ல தலைவர் என்பதைக் காட்ட நேரம் வந்துவிட்டது. இப்போதாவது செயல்படுங்கள்.

கரோனா மற்றும் ஊரடங்கிற்கு தடுப்பூசிகள் மட்டுமே நிரந்தரத் தீர்வாக உள்ளன. சமூக விலகல் மற்றும் முகக்கவசங்கள் என்பது தற்காலிகமானவையாகவே உள்ளன. அப்படி இருக்க மக்கள்தொகையில் மூன்று சதவீதத்தினருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

இந்தக் கட்டத்தில் இந்தியா தனது தடுப்பூசி தயாரிப்பை முறையாக திட்டமிடாவிட்டால் பல அலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனை பலமுறை பிரதமரிடம் நேரடியாகவே கூறியிருக்கிறேன். 

வைரஸ் உருமாறிக்கொண்டே இருக்கும். அதனால் தடுப்பூசிகள் இந்த விகிதத்தில் தொடர்ந்தால் மூன்றாவது மற்றும் நான்காவது அலையை இந்திய எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது ஒரு வளர்ந்து வரும் நோயாகும். ஆனால், இந்த அரசு வைரஸை எதிர்க்காமல், எதிர்க்கட்சியை எதிர்த்து போராடுவதாகக் கருதுகிறது.

கரோனா முதல் அலையை வெற்றிகரமாக கையாண்டு விட்டதாக அரசு பெருமை பேசியது. உலக நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்து சாதனை படைத்ததாக மெச்சிக் கொண்டது. இதனால் ஒரு பொய்யான பிம்பத்தினையே அரசு ஏற்படுத்தியுள்ளது. 

இது பொய்களைப் பரப்புவதற்கான நேரம் அல்ல. அரசு மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும். இது நாட்டின் எதிர்காலம். மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவது குறித்தது.

எதிர்கட்சிகளாகிய நாங்கள் அரசாங்கத்தின் எதிரி அல்ல. எதிர்க்கட்சி உங்களுக்கு வழி காட்டுகிறது. நாங்கள் சொல்வதைக் கேட்டிருந்தால் இப்போது இந்தவொரு நெருக்கடியை நாம் சந்தித்திருக்க மாட்டோம். எனவே இப்போதாவது மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்று ஆவேசமாகப் பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com