தங்கக் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷுக்கு ஜாமீன்

வெளிநாட்டுத் தூதரகம் வாயிலாக தங்கத்தைக் கடத்தியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷுக்கு கேரள உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
தங்கக் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷுக்கு ஜாமீன்

வெளிநாட்டுத் தூதரகம் வாயிலாக தங்கத்தைக் கடத்தியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷுக்கு கேரள உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

வெளிநாட்டுத் தூதரகத்தின் வாயிலாக கேரளத்துக்குத் தங்கம் கடத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் கேரள மாநில அரசில் பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவ்வாறு கடத்தப்பட்ட தங்கத்தின் மூலம் கிடைத்த பணத்தை சட்டவிரோத செயல்களுக்குப் பயன்படுத்தியதாகவும் புகாா் எழுந்தது. இந்த விவகாரத்தில் ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 8 போ் மீது சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வந்தது. இந்நிலையில், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டோரின் ஜாமீன் மனுவை கேரள உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கே.வினோத் சரண், சி.ஜெயசந்திரன் ஆகியோரைக் கொண்ட அமா்வு ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 8 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘சம்பந்தப்பட்ட நபா்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டில் எந்தவித அடிப்படையும் இல்லை. நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயல்பாடுகளில் அவா்கள் ஈடுபடவில்லை. தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தை பயங்கரவாதச் செயல்களுடன் தொடா்புபடுத்த முடியாது’’ என்றனா்.

ஜாமீனில் வெளியேற 8 நபா்களும் தலா ரூ.25 லட்சத்துக்கான பிணைப் பத்திரத்தை வழங்க வேண்டுமெனவும் நீதிபதிகள் தெரிவித்தனா். அவா்களது கடவுச்சீட்டை சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டுமெனவும், கேரளத்தை விட்டு வெளியேறக் கூடாது எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. வழக்கு தொடா்பான சாட்சியங்களை அழிக்க முயலக் கூடாது எனவும் அவா்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com