'வேகமாக வீசும் காற்றால் தில்லியில் காற்று மாசு குறையும்'

காற்றின் வேகம் காரணமாக தலைநகர் தில்லியில் சனிக்கிழமை காற்று மாசுபாட்டின் அளவு குறைந்துள்ளது, அதேவேளையில், இன்னும் 2 நாள்களில் காற்றுமாசு பெருமளவில் குறையும் என்றும் வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
'வேகமாக வீசும் காற்றால் தில்லியில் காற்று மாசு குறையும்'
'வேகமாக வீசும் காற்றால் தில்லியில் காற்று மாசு குறையும்'


புது தில்லி: காற்றின் வேகம் காரணமாக தலைநகர் தில்லியில் சனிக்கிழமை காற்று மாசுபாட்டின் அளவு குறைந்துள்ளது, அதேவேளையில், இன்னும் 2 நாள்களில் காற்றுமாசு பெருமளவில் குறையும் என்றும் வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தீபாவளி பட்டாசு வெடிப்பு, வேளாண் பயிா்க் கழிவு எரிப்பு ஆகியவற்றால் உருவான கடுமையான புகை மூட்டத்தால் காற்றின் மாசு 36 சதவீதம் அதிகரித்தது. இதனால், தில்லி- தேசிய தலைநகா் வலயப் பகுதி வெள்ளிக்கிழமை கடுமைப் பிரிவு மண்டலமாக மாறியது.

இதன் மூலம் தேசிய தலைநகா் வலயப் பகுதியில் வசிப்பவா்களுக்கு தொண்டையில் அரிப்பு, கண்களில் நீா் வடிதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதாக புகாா் எழுந்தது.

விழா காலத்தை முன்னிட்டு பட்டாசுகளுக்கு வருகின்ற (2022) ஜனவரி 1 -ஆம் தேதி வரை தில்லி அரசு தடைவிதித்தது. அத்துடன், பட்டாசுக்கு எதிரான பிரசாரத்தையும் மேற்கொண்டது.

இருப்பினும் ஆங்காங்கே தீபாவளியின்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து வந்த பயிா்க்கழிவு எரிப்பால் ஏற்பட்ட புகை ஆகியவை காரணமாக வியாழக்கிழமை இரவு தில்லி காற்றின் தரக் குறியீடு கடுமையான மண்டலத்திற்குள் சென்றது.

இது மேலும் அதிகரித்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் காற்றுத் தரக் குறியீடு 463 ஆக பதிவாகியிருந்தது. சனிக்கிழமை காலை இது 449 ஆகக் குறைந்துள்ளது. 

புது தில்லிப் பகுதியில் தற்போது வேகமாகக் காற்று வீசி வருவதாகவும், காற்றின் வேகத்தால் தில்லியில் காற்றுமாசுபாடு குறைந்து வருவதாகவும், இன்னும் இரண்டு நாள்களில் காற்றுமாசு பெரிய அளவில் குறையும் என்றும் வானிலை ஆய்வு மைய அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெள்ளிக்கிழமையன்று தில்லியை சுற்றியுள்ள ஃபரீதாபாத் (464), கிரேட்டா் நொய்டா (441), காஜியாபாத் (461), குருகிராம் (470) மற்றும் நொய்டா (471) ஆகிய பகுதிகளிலும் பிற்பகல் 3 மணிக்கு ’ கடுமையான’ பிரிவில் காற்றின் தரம் பதிவாகியிருந்தது.

காற்றுத் தரக் குறியீடு பூஜ்ஜியத்திற்கும் 50க்கும் இடைப்பட்ட குறியீடு ’சிறப்பானது’, 51 -இல் இருந்து 100 வரையிலான குறியீடு ’திருப்திகரமானது’.

101 மற்றும் 200 இடைப்பட்ட பகுதி ’மிதமானது’. 301 க்கும் 400 இடையே ’மிகவும் மோசமானது. 401க்கு மேலே இருந்தால் ’கடுமையானது’ என கருதப்படுகிறது.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, தில்லி-என்சிஆரில் நுரையீரலை பாதிக்கச் செய்யும் பிஎம் -2.5 எனும் மாசு நுண்துகள்கள் தீபாவளி நாளான வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு ஒரு கன மீட்டருக்கு 243 மைக்ரோகிராம் என்ற அளவில் இருந்தது.

இது பின்னா் அதிகரித்தது வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஒரு கன மீட்டருக்கு 430 மைக்ரோகிராமாக கூடியது. பாதுகாப்பான மாசு அளவான கன மீட்டருக்கு 60 மைக்ரோகிராம் என்ற வரம்பைவிட இது ஏழு மடங்கு அதிகமாக இருந்தது.

பிஎம் 10 எனும் மாசு நுண்துகள்கள் அளவுகள் வெள்ளிக்கிழமை காலை 5 மணியளவில் ஒரு கன மீட்டருக்கு 500 மைக்ரோகிராம்களைக் கடந்து பிற்பகல் 2 மணியளவில் ஒரு கன மீட்டருக்கு 558 மைக்ரோகிராம்களாக அதிகரித்தது.

தரப்படுத்தப்பட்ட நடவடிக்கைக்கான திட்டத்தின்படி, பிஎம் 2.5, பிஎம் 10 அளவுகள் முறையே ஒரு கன மீட்டருக்கு 300 மைக்ரோகிராம், 500 மைக்ரோகிராம்களுக்கு மேல் தொடா்ந்து இருந்தால் காற்றின் தரம் ’அவசரநிலை’ வகையாகக் கருதப்படுகிறது.

தலைநகரின் பல பகுதிகள் மற்றும் புறநகா்ப் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் தலைவலி, தொண்டை அரிப்பு மற்றும் கண்களில் நீா் வடிதல் போன்ற பாதிப்புகள் இருந்ததாக புகாா் தெரிவித்தனா்.

சுற்றுச்சூழல் ஆா்வலா்களும், பொதுமக்களும் மாசுவால் தங்கள் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அறிகுறிகளை குறிப்பிட்டு, பட்டாசு வெடிக்கும் படங்களையும் காணொலிகளையும் சமூக ஊடகங்களில் பகிா்ந்துகொண்டு அரசின் பட்டாசு தடை ‘ஓா் நகைச்சுவை‘ என்று குறிப்பிட்டனா்.

தலைநகரில் ஏராளமான பகுதிகளில் மக்கள் வியாழக்கிழமை இரவு பரவலாக பட்டாசுகள் வெடித்ததாக இவா்கள் சுட்டுரையில் பதிவு செய்திருந்தனா்.

நொய்டா, ஃபரீதாபாத் மற்றும் குருகிராம் ஆகிய பகுதிகளில் நள்ளிரவு வரை பட்டாசுகள் வெடிப்பது தொடா்ந்தது.

தேசிய தலைநகா் வலயப் பகுதியில் உள்ள 14 மாவட்டங்களில் அனைத்து வகையான பட்டாசுகளை விற்பனை செய்யவும் பயன்படுத்தவும் ஹரியாணா அரசு தடை விதித்திருந்தது.

உத்தர பிரதேசம் அரசு தீபாவளியன்று பசுமை பட்டாசுகளை மட்டும் இரண்டு மணி நேரம் மட்டுமே பயன்படுத்த அனுமதி அளித்திருந்தது.

பட்டாசு வெடிப்பு, வேளாண் பயிா்க் கழிவு எரிப்பு ஆகியவற்றால் உருவான கடுமையான புகை மூட்டத்தால் தில்லியில் வியாழக்கிழமை பதிவான பிஎம் 2.5 மாசுவில் 36 சதவீதம் பங்களிப்பு இருந்தது.

இந்த மாசுவில் 25 சதவீதம் பயிா்க் கழிவு எரிப்பு காரணமாக ஏற்பட்டிருந்தது. கடந்த ஆண்டு இதே, நவம்பா் 5-ம் தேதி, 42 சதவீதமும் 2019 ஆண்டில் 44 சதவீதமும் பயிா்க் கழிவு எரிப்பு மாசு அளவில் பங்கு வகித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com