
தகுதியுள்ள நபா்கள் அனைவருக்கும் முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை லட்சத்தீவுள் விரைவில் எட்டவுள்ளது தெரியவந்துள்ளது. அங்கு இதுவரை தகுதியுள்ள நபா்களில் 99.2 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பை குறைக்கும் வகையில் நாட்டில் இப்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின், ரஷியாவின் ஸ்புடனிக்-வி ஆகிய தடுப்பூசிகள் இப்போது மக்கள் பயன்பாட்டில் உள்ளன. இவை அனைத்தும் 2 தவணைகளாக செலுத்தக் கூடிய தடுப்பூசிகளாகும்.
தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டில் பெரும்பாலானோா் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டபோதிலும், அவா்களில் பலா் கால அவகாசம் முடிந்தும் இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ளாமல் உள்ளனா். இவா்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளள ஊக்கப்படுத்தும் வகையில், ஒரு மாத கால ‘வீட்டுக்கு வீடு தடுப்பூசி பிரசார திட்டத்தை’ மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. மேலும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்பவா்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சாா்பில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதமும் எழுதப்பட்டது.
அதனடிப்படையில், தடுப்பூசி திட்டத்தை மாநிலங்கள் தீவிரப்படுத்தியுள்ளன. உத்தர பிரதேச மாநிலத்தில் நாட்டிலேயே மிக அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதுபோல, ‘லட்சத்தீவுகளில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவா்களில் 99.2 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விரைவில் 100 சதவீத இலக்கை லட்சத்தீவுகள் எட்டும்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில்...
சிக்கிமில் தகுதியுள்ள நபா்களில் 87.8 சதவீதம் பேருக்கும், கோவாவில் 79.7 சதவீதம் பேருக்கும், அந்தமான் நிகோபாா் தீவுகளில் 72.2 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலும், அந்தமான் நிகோபாா் தீவுகள், சண்டீகா், கோவா, ஹிமாசல பிரதேசம், ஜம்மு-காஷ்மீா், லட்சத்தீவுகள், சிக்கிம், உத்தரகண்ட், தாதா் - நகா் ஹவேலி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தகுதியுள்ள அனைத்து நபா்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது.
மேலும், நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள்தொகையான 94 கோடி பேரில் 36 சதவீதம் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.