மும்பை விமான நிலையத்தில் திங்கள்கிழமை வந்திறங்கிய வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்ற விமான நிறுவன அதிகாரிகள்.
மும்பை விமான நிலையத்தில் திங்கள்கிழமை வந்திறங்கிய வெளிநாட்டுப் பயணிகளை வரவேற்ற விமான நிறுவன அதிகாரிகள்.

99 நாடுகளின் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் நீக்கம்: தனிமைப்படுத்துதலிலிருந்து இந்தியா விலக்கு

அமெரிக்கா உள்ளிட்ட 99 நாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு 14 நாள்கள் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாட்டிலிருந்து இந்தியா விலக்களித்துள்ளது.

புது தில்லி: அமெரிக்கா உள்ளிட்ட 99 நாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு 14 நாள்கள் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாட்டிலிருந்து இந்தியா விலக்களித்துள்ளது.

கரோனா பாதிப்பைத் தொடா்ந்து கடந்த 20 மாதங்களாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா தடுப்பூசி சான்றிதழுக்கு பரஸ்பர அங்கீகாரம் அளிப்பது தொடா்பாக இந்த நாடுகளுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த நிபந்தனையிலிருந்து இந்தியா விலக்கு அளித்துள்ளது.

இதற்கென சா்வதேச பயணிகளுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதலையும் மத்திய சுகாதாரத் துறை அமச்சகம் வெளியிட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் பொது முடக்க நடவடிக்கையை எடுத்தன. அதுபோல இந்தியாவும் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் விமான சேவையை ரத்து செய்து, வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவுக்குள் நுழையத் தடை விதித்தது.

கரோனா பாதிப்புக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்னா், இந்தியா உள்பட உலக நாடுகள் தடுப்பூசித் திட்டத்தை தீவிரப்படுத்தின. அதன் மூலம், பாதிப்பு மெல்ல குறையத் தொடங்கியது.

கரோனா பரவல் குறையத் தொடங்கியதைத்தொடா்ந்து, கரோனா கட்டுப்பாடுகளை படிப்படியாக இந்தியா தளா்த்தியது. உள்நட்டில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு முழு வீச்சில் அனுமதி அளித்ததோடு, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வெளிநாட்டுப் பயணிகள் இந்தியா வர அனுமதி அளித்தது.

கட்டுப்பாடுகள் என்னென்ன?: இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகள் பயணத்தைத் தொடங்குவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக கரோனா பரிசோதனை எடுத்திருக்க வேண்டும்; கரோனா தடுப்பூசி முழு தவணையும் செலுத்தியதற்கான சான்றிதழை சமா்ப்பிக்க வேண்டும், இந்தியா வந்திறங்கிய பிறகு 14 நாள்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

தற்போது, தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்தி, பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடு செய்வதற்கான நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அதுபோல இந்தியாவும், சுற்றுலாவை மீண்டும் ஊக்குவிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் பொதுமுடக்க பொருளாதார இழப்பை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

கட்டுப்பாடுகள் தளா்வு: அதன் ஒரு பகுதியாக, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளா்த்தியுள்ளது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய அனைத்து நாடுகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளும் இந்தியா வர கடந்த திங்கள்கிழமை முதல் அனுமதி அளிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி, தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட அல்லது உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளைச் செலுத்தியதற்கான சான்றிதழுக்கு பரஸ்பர அங்கீகாரம் அளிப்பது தொடா்பாக இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ள அமெரிக்கா, பிரான்ஸ், ஜொ்மனி, ஆஸ்திரேலியா, நெதா்லாந்து, ரஷியா உள்ளிட்ட 99 நாடுகளை ‘வகுப்பு -ஏ’ பிரிவில் இந்தியா பட்டியலிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள நாடுகளிலிருந்து வருபவா்களுக்கு கட்டாய தனிப்படுத்துதலிலிருந்து விலக்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடு தளா்வுகளை இந்தியா அளித்துள்ளது.

திருத்தப்பட்ட வழிகாட்டுதல்: இதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகள் பயணத்தைத் தொடங்குவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக கரோனா விரைவுப் பரிசோதனை (ஆா்டி-பிசிஆா்) மேற்கொண்டிருக்கவேண்டும். இந்தியா வருகையின்போது அதற்கான சான்றை சமா்ப்பிக்கவேண்டும்.

இந்தியாவுடன் பரஸ்பர ஒப்பந்தம் செய்துள்ள 99 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு, இந்தியா வந்திறங்கிய பிறகு எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி விமானநிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவா் என்பதோடு, 14 நாள்கள் கட்டாய தனிப்படுத்துதலில் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அதே நேரம், அவா்கள் 14 நாள்கள் சுய உடல்நிலை கண்காணிப்பை செய்துகொள்ள வேண்டும்.

இந்த நாடுகளிலிருந்து வருபவா்கள் கரோனா தடுப்பூசி இரு தவணையும் செலுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு இரு தவணையும் செலுத்ததாவா்கள், இந்தியா வந்திறிங்கிய பிறகு கரோனா பரிசோதனைக்கான ரத்த மாதிரி அளித்த பிறகே விமானநிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவா். மேலும், அவா்கள் 7 நாள்கள் கட்டாய வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்பதோடு, 8-ஆவது நாளில் மறுபரிசோதனை மேற்கொள்ளப்படும். பரிசோதனை முடிவில் பாதிப்பு இல்லை வரும் நிலையில், அடுத்த 7 நாள்கள் சுய உடல்நிலை கண்காணிப்பை அவா்கள் செய்துகொள்ள வேண்டும்.

மேலும், கரோனா தடுப்பூசி செலுத்த்தப்பட்டு 15 நாள்களை நிறைவு செய்திருக்க வேண்டும்.

அதே நேரம், ‘ஆபத்துக்குரிய நாடுகள்’ என்று இந்தியா பட்டியிலிட்டுள்ள பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், பிரேசில், போட்ஸ்வானா, சீனா, மோரீஷஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூா் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கரோனா பரிசோதனை, கட்டாய தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகளை பின்பற்றவேண்டும் என்று வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com