புது தில்லி: உலக நாடுகளிலேயே, அதிக உடலுறுப்புகள் தானம் செய்யப்படுவதிலும், உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதிலும் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது.
ஆண்டுதோறும் உடலுறுப்புகள் தானம் அளிக்கப்படும் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டில் 12,746 ஆக உயர்ந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
சர்வதேச உடலுறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை புள்ளிவிவரங்களை வெளியிட்ட மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, நாட்டில், ஆண்டுதோறும் உடலுறுப்பு தானமளிக்கும் எண்ணிக்கையானது மிக அதிகமாக உயர்ந்திருப்பது மிகவும் பெருமையளிப்பதாக உள்ளது. 2013ஆம் ஆண்டு இது 4,990 ஆக இருந்த நிலையில், 2019ஆம் ஆண்டு 12,746 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் உலகிலேயே, உடலுறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சையில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது.
கரோனா பேரிடர் காலத்தில் உடலுறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சைகளில் பெரியளவில் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. இது விரைவில் சீராகும் என்று எதிர்பார்ப்பதாகவும், 2013ஆம் ஆண்டைக் காட்டிலும் தற்போது உடலுறுப்பு தானம் நான்கு மடங்காக உயர்ந்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.