கேரளத்தில் மழைக்கு 25 பேர் பலி

கேரளத்தின் மத்திய மாவட்டங்களில் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 25-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 9 பேர் குழந்தைகள்.
கேரளத்தில் மழைக்கு 25 பேர் பலி

கேரளத்தின் மத்திய மாவட்டங்களில் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 25-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 9 பேர் குழந்தைகள்.
 வெள்ளத்தில் மிதக்கும்...:
 அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கேரளத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கோட்டயம், இடுக்கி ஆகிய மத்திய மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் மழை தொடர்பான சம்பவங்களில் சனிக்கிழமை 6 பேர் பலியான நிலையில், உயிரிழப்பு ஞாயிற்றுக்கிழமை 25-ஆக
 உயர்ந்தது.
 22 சடலங்கள் மீட்பு: கோட்டயம் மாவட்டம் கூட்டிக்கல் மற்றும் இடுக்கி மாவட்டம் கொக்கையாறு ஊராட்சிகளில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை, காவல் துறை, தீயணைப்புத் துறையினர் உள்ளூர்வாசிகளுடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமை காலையில் மீட்புப் பணியைத் தொடங்கியதாக மாநில வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன் பிடிஐ செய்தியாளரிடம் தெரிவித்தார்.
 நிலச்சரிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கோட்டயம் மாவட்டத்தில் 13 பேரின் உடல்களும், இடுக்கி மாவட்டத்தில் 9 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் கூறுகையில் "மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான கொக்கையாறு பகுதியில் 3 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டன. அங்கு காணாமல் போன ஐந்து பேரைத் தேடி வரும் பணிகள் நடைபெற்று வருகின்றன' என்று தெரிவித்தார்.
 தீவிர மீட்பு முயற்சிக்குப் பின், சேற்றில் புதைந்துவிட்ட அந்த 3 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கொக்கையாறு மற்றும் கூட்டிக்கல் பகுதிகளைப் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உரிய நேரத்தில் மீட்புப் பணிகளைத் தொடங்க மாநில அரசு தவறிவிட்டது என்று அவர் குற்றம்சாட்டினார்.
 கூட்டிக்கல் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். அவர்களில் மூன்று பேரின் உடல்கள் சனிக்கிழமையும், 3 பேரின் உடல்கள் ஞாயிற்றுக்கிழமையும் மீட்கப்பட்டன. மலைப்பகுதியிலிருந்து பாய்ந்து வந்த வெள்ளம் இவர்களின் வீட்டை அடித்துச் சென்றது. அப்போது வீட்டிலிருந்த கிளாராம்மா (65), அவரது மகன் மார்ட்டின் (48), மருமகள் சினி (37), பேத்திகள் ஸ்நேஹா (13), சோனா (11), சாண்ட்ரா (9) ஆகியோர் பலியாகினர்.
 புயல் சின்னம் வலுவிழந்தது: இதனிடையே, பலத்த சேதங்களை சனிக்கிழமை ஏற்படுத்திய மழை, ஞாயிற்றுக்கிழமை சற்று குறைந்தது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் "தென்கிழக்கு அரபிக்கடலில் கேரளம் அருகே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்து, தெற்கு கர்நாடகத்துக்கும் தெற்கு தமிழ்நாட்டையும் நோக்கி நகர்ந்துள்ளது. இதனால் கேரளத்திலும் மாஹி பகுதியிலும் ஆங்காங்கே பலத்த மழை பெய்யும். அதன் பிறகு மழையின் அளவு குறையும். இதைத் தொடர்ந்து 20-ஆம் தேதி முதல் மீண்டும் கனமழை தொடங்கி, 3-4 தினங்களுக்கு நீடிக்கும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 மீட்புப் பணியில் ராணுவம்: கேரளத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ராணுவத்தின் குழு வந்து சேர்ந்தது. காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் இக்குழுவினர் ஈடுபட்டனர்.
 இது தொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில் "உள்ளூர்வாசிகள் அளித்த தகவல்படி இன்னமும் சிலர் வெள்ள பாதிப்புப் பகுதிகளில் சிக்கியுள்ளனர். தற்போது மழை இல்லை. எனினும் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கோட்டயம் மாவட்டம், கூட்டிக்கல் பகுதியில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள காவாலி கிராமத்தில் பாங்கோடு ராணுவ நிலையத்தைச் சேர்ந்த மெட்ராஸ் ரெஜிமெண்ட் படையினர் மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்' என்று தெரிவித்தார்.
 பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருள்களுடன் கடற்படை ஹெலிகாப்டர் சென்றடைந்துள்ளது. கனமழை தொடர்பான சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற எச்சரிக்கைகளை வானிலை மையம் திரும்பப் பெற்றபோதிலும், மிகவும் கவனமுடன் இருக்குமாறு மாநில மக்களை முதல்வர் பினராயி விஜயன்கேட்டுக் கொண்டுள்ளார்.
 மத்திய அரசு உதவி வழங்கும் - அமித் ஷா: கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். அவர் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் "கேரள வெள்ள நிலைமையை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மீட்பு நடவடிக்கையில் உதவ தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. அனைவரும் பாதுகாப்பாக இருக்க பிரார்த்திக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
 கேரளத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படை 11 குழுக்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 பினராயி விஜயனுடன் பிரதமர் பேச்சு
 கேரள வெள்ள நிலைமை தொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார்.
 இது தொடர்பாக மோடி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் கூறியிருப்பதாவது:
 கேரளத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி சிலர் உயிரிழந்தது துயரத்தை அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
 கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் பேசினேன். கேரளத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது குறித்து விவாதித்தேன்.
 காயமடைந்தோருக்கும், பாதிக்கப்பட்டோருக்கும் உதவ அதிகாரிகளும் ஊழியர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைவரின் நலனுக்கும் பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com