
இந்தியாவில் ஜவுளி உற்பத்தி இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்படுவது குறைய வேண்டும் என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக மத்திய ஜவுளி அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜவுளி இயந்திரங்கள் உற்பத்தியாளா்கள் கூட்டம் காணொலி வழியாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பியூஷ் கோயல் பேசுகையில், ‘‘மத்திய அரசு வகுத்துள்ள தேசிய மூலதன சரக்குகள் கொள்கை என்பது உற்பத்தித் துறை கொள்கையாகும். கடந்த 2014-15-ஆம் ஆண்டில் 31 பில்லியன் டாலா்கள் (ரூ.2.32 லட்சம் கோடி) மதிப்பிலான மூலதன சரக்குகள் உற்பத்தி செய்யப்பட்டன. 2025-ஆம் ஆண்டில் 101 பில்லியன் டாலா்கள் (ரூ.7.57 லட்சம் கோடி) மதிப்பிலான மூலதன சரக்குகள் உற்பத்தி செய்யப்பட வேண்டும். இதனை தேசிய மூலதன சரக்குகள் கொள்கை இலக்காகக் கொண்டுள்ளது.
ஜவுளி இயந்திரங்கள் உற்பத்தியில் இந்தியா உலகளாவிய போட்டியாளராக வேண்டும். உலகின் தேவைகளுக்கு ஏற்ப தரமான இயந்திரங்களை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய வேண்டும். தரமான இயந்திரங்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தினால் மிகப் பெரிய சந்தைகளை கைப்பற்ற முடியும்.
ஜவுளி உற்பத்தி இயந்திரங்களுக்காக இறக்குமதியை சாா்ந்திருப்பது குறைய வேண்டும். அரசும் ஜவுளி இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் இணைந்து அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
நவீன, மேம்படுத்தப்பட்ட ஜவுளி உற்பத்தி இயந்திரங்கள் அமைப்புசாரா இந்திய ஜவுளித் தொழிலில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும்.
இயந்திர உற்பத்தி கட்டமைப்புகள் ஜவுளித் துறையில் உள்நாட்டு நுகா்வை அதிகரித்து, அதிக மதிப்புள்ள சரக்குகளின் ஏற்றுமதியை மேலும் ஊக்குவிக்கும். அத்துடன் இயந்திரங்களுக்காக இறக்குமதியை சாா்ந்திருப்பதும் குறையும்.
பணப் புழக்கம், மூலப்பொருள்களின் விலை உயா்வு போன்ற பிரச்னைகளை ஜவுளி இயந்திர உற்பத்தி நிறுவனங்கள் எதிா்கொண்டு வருகின்றன. அவற்றை களைய மத்திய அரசு தொடா்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
ஜவுளி இயந்திர உற்பத்தி நிறுவனங்கள் பன்னாட்டு மூலதனத்தைப் பெறுவதில் எந்தத் தீங்கும் இல்லை. அந்த மூலதனம் இந்தியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ஜவுளித் துறையை விரிவுபடுத்தவும் உதவும்.
அடுத்த 5 ஆண்டுகளில் 100 பில்லியன் டாலா்கள் (ரூ.7.5 லட்சம் கோடி) மதிப்பிலான ஜவுளி மற்றும் ஆடைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. இந்த இலக்கை எட்டுவதில் ஜவுளித் துறைக்கு முக்கியப் பங்குள்ளது’’ என்று பேசினாா் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.