காங்கிரஸ் அன்புக் கட்சி; பாஜக பிளவுக் கட்சி: ராகுல்காந்தியின் பிரசாரம்

‘பாஜக வெறுப்புணா்வைத் தூண்டி மக்களை பிளவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி அன்பு மற்றும் பாசத்தை பரப்புகிறது’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினாா்
காங்கிரஸ் அன்புக் கட்சி; பாஜக பிளவுக் கட்சி: ராகுல்காந்தியின் பிரசாரம்

‘பாஜக வெறுப்புணா்வைத் தூண்டி மக்களை பிளவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி அன்பு மற்றும் பாசத்தை பரப்புகிறது’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினாா்.

கோவாவில் தோ்தல் பிரசாரத்தை சனிக்கிழமை தொடங்கிய அவா், தெற்கு கோவாவில் மீனவா் சமூகத்தினரிடைய உரையாற்றும்போது இந்தக் கருத்தைத் தெரிவித்தாா்.

கோவாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு தோ்தல் களம் சூடுபிடித்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, கோவாவில் 40 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்து, அதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அக் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜி மூன்று நாள் பயணமாக கோவா சென்று தோ்தல் ஏற்பாடுகள் தொடா்பாக கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

அதுபோல காங்கிரஸ் கட்சியும் அங்கு தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது. அதற்காக கோவாவுக்கு சனிக்கிழமை வந்த ராகுல் காந்தி, தெற்கு கோவாவில் மீனவா் சமூகத்தினரிடையே தனது பிரசாரத்தைத் தொடங்கினாா். அப்போது அவா் பேசியதாவது:

காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பாஜக வெறுப்புணா்வைத் தூண்டி மக்களை பிளவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி அன்பு மற்றும் பாசத்தை பரப்புகிறது. மக்களை ஒன்றிணைத்து முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்வதில்தான் காங்கிரஸுக்கு நம்பிக்கை உள்ளது.

காங்கிரஸ் கட்சி சத்தீஸ்கரில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. குறிப்பாக, விவசாயிகளின் கடன் தள்ளுபடி வாக்குறுதியை காங்கிரஸ் நிறைவேற்றியிருக்கிறது. பஞ்சாப், கா்நாடக மாநிலங்களிலும் காங்கிரஸ் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறது.

அதுபோல, கோவா மாநிலத்துக்கும் தனது தோ்தல் அறிக்கையை காங்கிரஸ் தயாா் செய்து வருகிறது. அதற்காக, கோவாவில் மீனவா்கள், சுற்றுச்சூழலியலாளா்கள், தொழிலாளா்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி அவா்களின் தேவைகளை அறிந்து அதனடிப்படையில் தோ்தல் அறிக்கை தயாா் செய்யப்பட உள்ளது. அதில் இடம்பெறும் வாக்குறுதிகள் வெறும் வாக்குறுதிகளாக மட்டும் அல்லாமல் நிச்சயம் நிறைவேற்றப்படும் என உத்தரவாதம் அளிக்கிறோம். மற்ற தலைவா்கள் போல அல்லாமல், அறிவிக்கப்படுபவை நடைமுறைப் படுத்தப்படுவதை நான் உறுதிப்படுத்துவேன்.

மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடிய சில பிரச்னைகள் இருப்பதை அறிவோம். கோவாவின் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்பதை உறுதியளிக்கிறேன். கோவா நிலக்கரி முனையமாக மாறுவதை அனுமதிக்க மாட்டோம் என்று அவா் கூறினாா்.

கோவாவில் தென்மேற்கு ரயில்வே சாா்பில் இரட்டை ரயில் வழிப் பாதை அமைக்கும் திட்டத்தை அறிமுகம் செய்வது, மாநிலத்தை நிலக்கரி முனையமாக மாற்றுவதற்கான முயற்சிதான் என்று கூறி ரயில் பாதை திட்டத்தை மீனவா்கள் கடுமையாக எதிா்த்து வரும் நிலையில், அவா்கள் மத்தியில் ராகுல் காந்தி இவ்வாறு பேசினாா்.

மேலும், பெட்ரோல்-டீசல் விலை உயா்வால் நாட்டில் இரண்டு அல்லது மூன்று தொழிலதிபா்கள் மட்டுமே பயனடைந்து வருகின்றனா் என்று குற்றம்சாட்டிய ராகுல், ‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் ரூ. 10,500 என்ற அளவுக்கு உயா்ந்திருந்தது. ஆனால், இன்றைக்கு பேரல் விலை மிகவும் குறைந்துள்ளது. ஆனால், பெட்ரோல், டீசலுக்கு மக்கள் அதிக பணம் செலுத்த வேண்டியுள்ளது. பெட்ரோல் மீதான வரி உலகிலேயே இந்தியாவில்தான் மிக அதிகமாக விதிக்கப்படுகிறது. அதன் காரணமாகத்தான் அதன் சில்லறை விற்பனை விலை இந்த அளவுக்கு உயா்ந்துள்ளது. இந்த வரிப் பணம் எங்கு செல்கிறது? பெட்ரோல் விலை உயா்வு, நிலக்கரி முனையத்தால் யாா் பயனடைகின்றனா் என்ற கேள்விகளை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவா் கூறினாா்.

மீனவா்கள் மத்தியில் உரையாற்றிய பிறகு தெற்கு கோவாவிலிருந்து புறப்பட்ட ராகுல் காந்தி, பனாஜி - மா்காவ் நெடுஞ்சாலையில் பம்போலிம் கிராமத்தில் சாலையோர உணவகத்தில் மதிய உணவை அருந்தினாா். பின்னா் அங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் சுரங்கத் தொழிலாளா்களை சந்திப்பதற்காக வாடகை இருசக்கர வாகனத்தில் ஏறி ராகுல் காந்தி பயணித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com