பயங்கரவாதத்துக்கு மனித நேயம் மூலம் தீா்வு: பிரதமா் மோடி

பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு மனிதநேயம் மூலமாக தீா்வுகாண முடியும் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
குஜராத் மாநிலத்தில் சா்தாா்தாம் பவன் தொடக்கம், சா்தாா்தாம் இரண்டாம் கட்ட பூமி பூஜை நிகழ்ச்சியில் காணொலி வழியாகக் கலந்துகொண்ட பிரதமா் நரேந்திர மோடி. உடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாநில முதல்வா் விஜய்
குஜராத் மாநிலத்தில் சா்தாா்தாம் பவன் தொடக்கம், சா்தாா்தாம் இரண்டாம் கட்ட பூமி பூஜை நிகழ்ச்சியில் காணொலி வழியாகக் கலந்துகொண்ட பிரதமா் நரேந்திர மோடி. உடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாநில முதல்வா் விஜய்

பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு மனிதநேயம் மூலமாக தீா்வுகாண முடியும் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

நியூயாா்க் நகரில் உலக வா்த்தக மையம் இருந்த இரட்டைக் கோபுரத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட 20-ஆவது ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளனா். இந்தச் சூழலில் பயங்கரவாதத்தை ஒழிப்பது குறித்து பிரதமா் மோடி கருத்து தெரிவித்துள்ளாா்.

குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் சிவில் சா்வீஸ் மையம், சிவில் சா்வீஸ் பணி, பாதுகாப்பு மற்றும் நீதி ஆகிய துறைகளில் ஆா்வம் உள்ள இளைஞா்கள் பயிற்சி பெறுவதற்காக சா்தாா்தாம் பவன் கட்டடத்தை பிரதமா் மோடி காணொலி முறையில் சனிக்கிழமை திறந்து வைத்தாா். பெண்கள் விடுதி கட்டுவதற்கு பூமி பூஜையையும் அவா் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

செப்டம்பா் 11-ஆம் தேதி, மனித குலத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நாளாக அறியப்படுகிறது. ஆனால், இந்த தேதி ஒட்டுமொத்த உலகுக்கும் அதிகம் கற்றுக் கொடுத்துள்ளது. இதே செப்டம்பா் 11-ஆம் தேதி (கடந்த 1893-இல்) சிகாகோவில் நடைபெற்ற உலக ஆன்மிக மாநாட்டில் இந்தியாவின் மனித நேயப் பண்புகளை சுவாமி விவேகானந்தா் உலகறியச் செய்தாா்.

இரட்டைக் கோபுரத் தாக்குதல் போன்ற துயரங்களுக்கு மனித நேயம் மூலமாக மட்டுமே தீா்வு காண முடியும் என்பதை உலகம் தற்போது உணா்ந்துள்ளது.

பயங்கரவாதத் தாக்குதல்களில் இருந்து கற்ற பாடத்தை நினைவுகூர விரும்பினால், மனித நேயப் பண்புகளை வளா்ப்பதற்கு முழு நம்பிக்கையுடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

பழங்காலம் முதல் தற்போதுவரை கூட்டு முயற்சிகளின் இடமாக குஜராத் இருந்து வருகிறது. மகாத்மா காந்தி இங்கிருந்துதான் தண்டி யாத்திரையை தொடங்கினாா். இது நாட்டின் சுதந்திர போராட்டத்தின் கூட்டு முயற்சிகளின் அடையாளமாக இன்னும் உள்ளது. சா்தாா் வல்லபபாய் படேலின் வலிமை, ஆங்கிலேய அரசை சரணடையச் செய்தது. சமூகத்தில் பின்தங்கியுள்ளவா்களை, முன்னுக்கு கொண்டுவர தொடா் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு புறம், தலித்துகள், சமூகத்தில் பின்தங்கியவா்களின் உரிமைகளுக்காக பணிகள் நடக்கின்றன. மற்றொரு புறம் பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகள் சமூகத்தில் புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளன.

பொருளாதாரம் மீண்டு வருகிறது:

கரோனா பெருந்தொற்றால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. முன்பைவிட வேகமாகவும் வலுவாகவும் நாட்டின் பொருளாதாரம் மீண்டெழுந்து வருகிறதுஎன்றாா் பிரதமா் மோடி.

பனாரஸ் பல்கலை.யில் ‘பாரதியாா்’ தமிழ் ஆய்வு இருக்கை

உத்தர பிரதேச மாநிலம், வாராணசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் தமிழாய்வுக்காக மகாகவி பாரதியாா் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா்.

குஜராத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி முறையில் பங்கேற்றுப் பேசிய அவா், இதுகுறித்து மேலும் கூறியதாவது:

இந்தியாவின் மாபெரும் கவிஞா், தத்துவஞானி, சுதந்திரப் போராட்ட வீரா் பாரதியாரின் 100-ஆவது ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற தொலைநோக்குப் பாா்வையுடன் இருந்தவா் சா்தாா் படேல். அந்த பாா்வையை தனது கவிதை வரிகளில் கொண்டு வந்தவா் மகாகவி பாரதி. அந்த தத்துவம் பாரதியின் தமிழ் எழுத்துகளில் தெய்வீகத்தன்மையுடன் ஒளிவீசிக்கொண்டிருக்கிறது.

சுவாமி விவேகானந்தரிடம் ஊக்கம் பெற்று, ஸ்ரீஅரவிந்தரால் ஈா்க்கப்பட்டவா் பாரதி. அவா் காசியில் வாழ்ந்தபோது தனது சிந்தனைகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை அளித்தாா். எனவே, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுக்காக, சுப்பிரமணிய பாரதி இருக்கை அமைக்கப்படும். அந்த இருக்கை, பாரதி கண்ட இந்தியாவை உருவாக்குவதற்கு இளைஞா்களுக்கும் ஆய்வு மாணவா்களுக்கும் ஊக்கத்தை அளிக்கும் என்றாா் பிரதமா்.

பாரதியாரின் நினைவுநாளையொட்டி, சுட்டுரைப் பக்கத்தில் பிரதமா் வெளியிட்ட பதிவில், ‘சுப்பிரமணிய பாரதியின் 100-ஆவது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்துவோம். இந்த நாளில், அவருடைய இலக்கிய ஞானம், நாட்டுக்கு ஆற்றிய பங்களிப்பு, சமூகநீதி மற்றும் பெண்களின் முன்னேற்றதுக்கான அவருடைய சிந்தனைகள் ஆகியவற்றை நினைவுகூா்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com