பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் மீதான ஒடுக்குமுறை அதிகரிப்பு

பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினர் மீதான ஒடுக்குமுறை 2020-இல் அதிகரித்துள்ளது தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் சமீபத்திய அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் மீதான ஒடுக்குமுறை அதிகரிப்பு
Published on
Updated on
1 min read


பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினர் மீதான ஒடுக்குமுறை 2020-இல் அதிகரித்துள்ளது தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் சமீபத்திய அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

2019-ஐக் காட்டிலும் 2020-இல் பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்றங்கள் 9.4 சதவிகிதமும், பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் 9.3 சதவிகிதமும் அதிகரித்துள்ளன.

அதேசமயம், மூத்த குடிமக்கள், வெளிநாட்டினர், குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான குற்றங்கள் குறைந்துள்ளன. வரதட்சணைக் கொடுமையால் உயிரிழந்தது, பொருளாதாரக் குற்றங்கள், ஆள் கடத்தல், கள்ள நோட்டு அடிப்பது, ஆசிட் வீச்சு உள்ளிட்ட வழக்குகள் குறைந்துள்ளன.

17 மாநிலங்களில் பட்டியலினத்தவர்கள் மீதான ஒடுக்குமுறை தொடர்புடைய வழக்குகள் அதிகரித்துள்ளன. அவை அசாம், பிகார், ஹரியாணா, ஹிமாசல பிரதேசம், தமிழ்நாடு, புதுச்சேரி, ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஒடிசா, ராஜஸ்தான், தெலங்கானா, திரிபுரா, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், சண்டிகர் மற்றும் ஜம்மு-காஷ்மீர்.

பழங்குடியினர் மீதான ஒடுக்குமுறைகள் அசாம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் அதிகரித்துள்ளன.

பட்டியலினத்தவர்கள் மீதான குற்றங்களில் மத்தியப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்ற விகிதம் 60.8. இதுவே ராஜஸ்தானில் 57.4, பிகாரில் 44.5, உத்தரப் பிரதேசத்தில் 30.7 ஆக உள்ளது. பழங்குடியினர் மீதான குற்றங்களில் கேரளம் முதலிடத்தில் உள்ளது. கேரளத்தில் 26.8, ராஜஸ்தானில் 20.3, தெலங்கானாவில் 17.4 மற்றும் மத்தியப் பிரதேசத்தில் 15.7 ஆக குற்ற விகிதம் பதிவாகியுள்ளது.

குற்ற விகிதம் என்பது குறிப்பிட்ட மாநிலத்தில் குறிப்பிட்ட சமூகத்தில் 1 லட்சம் மக்கள்தொகையை அளவீடாகக் கொண்டு கணக்கிடுவது.

கடந்தாண்டு மார்ச் 25 முதல் மே 31 வரை நாடு முழுமையான பொது முடக்கத்தில் இருந்தது. இதனால், பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்கள், திருட்டு, கொள்ளைச் சம்பவங்கள் குறைந்துள்ளதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. ஆனால், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் மீதான குற்றங்கள் மட்டும் அதிகரித்துள்ளது சமூகத்தின் மனநிலையை வெளிச்சம்போட்டு காட்டுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com