விரைவில் புதிய கூட்டுறவு கொள்கை: மத்திய அமைச்சர் அமித் ஷா தகவல்

அடுத்த ஐந்தாண்டுகளில், தொடக்கநிலை வேளாண் கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கை 3 லட்சமாக உயர்த்தப்படும் என மத்திய கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
அமித் ஷா
அமித் ஷா

புதிய கூட்டுறவு கொள்கையை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என மத்திய கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை அறிவித்துள்ளார். அதேபோல், கூட்டுறவு இயக்கத்தை பலப்படுத்த மாநிலங்களுடன் இணைந்து செயல்படுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முதல் தேசிய கூட்டுறவு மாநாட்டில் இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "அடுத்த ஐந்தாண்டுகளில், தொடக்கநிலை வேளாண் கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கை 3 லட்சமாக உயர்த்தப்படும். தற்போது, நாடு முழுவதும் 65,000 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டுவருகிறது. கூட்டுறவு சங்கங்கள் மாநில பட்டியலில் உள்ளபோது, மத்திய அரசு இதற்கு ஏன் தனியாக ஒரு அமைச்சகத்தை உருவாக்க வேண்டும் என சிலர் வியப்படைகின்றனர்.

இதற்கு சட்ட ரீதியாக பதில் அளிக்கப்படும். இதுகுறித்த விவாதத்தில் செல்ல வேண்டாம். இதில், மாநிலங்களுடன் மத்திய அரசு இணைந்து செயல்படும். மோதல் போக்கு இருக்காது. கூட்டுறவு இயக்கத்தை முன்னோக்கி எடுத்து செல்ல மாநிலங்களுடன் இணைந்து செயல்படுவோம்.

இத்துறையை நவீனப்படுத்தி பலப்படுத்தவே கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கப்பட்டது. முன்னதாக, 2002ஆம் ஆண்டு, அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இதற்கான கொள்கையை வகுத்தார். தற்போது, மோடி அரசு புதிய கொள்கையை வகுக்கவுள்ளது. 

முன்னெப்போதும் விட கூட்டுறவு இயக்கத்தின் தேவை இன்று மிக அதிகமாக உள்ளது. நாட்டின் வளர்ச்சியில் கூட்டுறவு சங்கங்கள் பெரிய அளவில் பங்காற்றுகின்றன. இந்தியாவை 5 ட்ரில்லியின் பொருளாதாரமாக மாற்ற கூட்டுறவு சங்கங்கள் மிக முக்கிய பங்காற்றவுள்ளது" என்றார். 

இந்த ஜூலை மாதம், கூட்டுறவு துறைக்கு என தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com