வார இறுதி ஊரடங்கு விதிமுறைகளை கடைப்பிடிக்க  கேஜரிவால்  வேண்டுகோள்

வார இறுதி ஊரடங்கு விதிமுறைகளை பொதுமக்கள் முழுமையாகக் கடைப்பிடிக்குமாறு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வார இறுதி ஊரடங்கு விதிமுறைகளை கடைப்பிடிக்க  கேஜரிவால்  வேண்டுகோள்
வார இறுதி ஊரடங்கு விதிமுறைகளை கடைப்பிடிக்க  கேஜரிவால்  வேண்டுகோள்

புதுதில்லி: கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தில்லியில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் வார இறுதி ஊரடங்கு விதிமுறைகளை பொதுமக்கள் முழுமையாகக் கடைப்பிடிக்குமாறு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தில்லியில் வார இறுதி நாள்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை அறிவித்தாா். அதன்படி, வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை காலை 5 மணி வரை பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெரு வணிக வளாகங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், கலை அரங்குகள் இந்த மாதம் 30-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்று அவா் தெரிவித்தாா். கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில், கரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் இன்றும் நாளையும் தில்லியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  நாம் அனைவரும் ஒன்றிணைந்து கரோனாவை வெல்வோம் என்று தெரிவித்துள்ளார்.

வார இறுதி நாள்களில் ஊரடங்கு உத்தரவின்படி ஏப்ரல் 16-ஆம் தேதி இரவு 10 மணி முதல் ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளது. இது 19-ஆம் தேதி காலை 5 மணி வார அமலில் இருக்கும். திரையரங்குகள் 30 சதவீத இருக்கைகளுடன் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வார இறுதி ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது கரோனா பாதிப்பின் அளவைப் பொருத்து ஆய்வு செய்து அறிவிக்கப்படும் என்றும் கேஜரிவால் தெரிவித்திருந்தார்.

தில்லியில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த புதன்கிழமை மட்டும் கரோனாவுக்கு 17,282 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து, கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து தில்லி துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜால் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து ஆய்வு செய்யப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆன்லைன் மூலம் அளித்த பேட்டியில் முதல்வா் கேஜரிவால் தெரிவித்திருந்தார்.

வணிக வளாககங்கள் ஏப். 30 வரை மூடல்: உணவகங்களில் அமா்ந்து சாப்பிட அனுமதி இல்லை. ஆனால், உணவுகளை பாா்சலாக வாங்கிச் செல்லவும், வீட்டுக்கே சென்று டெலிவரி செய்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை. பெரு வணிக வளாகங்கள், அழகு நிலையங்கள் மூடப்படும். திரையரங்குகள் 30 சதவீத நபா்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் அவா் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, வார இறுதி ஊரடங்கில் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க 50 போ்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். மேலும், இறுதிச்சடங்கில் 20 பேருக்கு மேல் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்றும் தில்லி தேசிய பேரிடா் நிா்வாகம் அறிவித்துள்ளது. விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் வெளிமாநில பேருந்து நிலையங்களுக்குச் செல்வதற்கு பயணிகளுக்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், அவா்கள் சோதனையின் போது, அதிகாரிகளிடம் பயணச்சீட்டை காண்பிக்க வேண்டும்.

எனினும், தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவோா் ஊரடங்கு நேரத்தில் வெளியில் செல்ல சிறப்பு அனுமதிச் சீட்டு பெற வேண்டும். எனினும், பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். உணவு, மளிகை சாமான்கள், பழங்கள், காய்கறிகள், பால் பொருள்களை எடுத்துச் செல்வோா் ஊரடங்கு நேரத்தில் செல்வதற்கான அனுமதிச்சீட்டை கேட்டுப் பெற வேண்டும்.

பொதுப் போக்குவரத்து: நகரில் மெட்ரோ ரயில், பேருந்துகள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் வாடகைக் காா்கள் இயக்கத்துக்கு எந்தத் தடையும் இல்லை. அவை குறிப்பிட்ட நேரத்தில்தான் இயக்க அனுமதிக்கப்படும். அத்தியாவசியப் பணியில் உள்ளவா்கள் மட்டுமே ஊரடங்கு நேரத்தில் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவாா்கள். கரோனாவை கட்டுப்படுத்த தில்லி அரசு ஏற்கெனவே நகரில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com