யூரியா உற்பத்திக்கு மானியம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நிலக்கரி அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி யூரியா உற்பத்தி செய்வதை ஊக்குவிப்பதற்கு மானியம் வழங்குவதற்கான பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
யூரியா உற்பத்திக்கு மானியம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி: நிலக்கரி அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி யூரியா உற்பத்தி செய்வதை ஊக்குவிப்பதற்கு மானியம் வழங்குவதற்கான பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், இந்தப் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘நிலக்கரி அடிப்படையிலான தொழில்நுட்பத்தில் யூரியாவை தயாரிக்கும் புதிய தொழில்நுட்பத்தை நாட்டிலேயே முதல் முறையாக தால்சோ் உர உற்பத்தி நிறுவனம் பயன்படுத்த உள்ளது. அந்நிறுவனத்துக்கு மானியம் வழங்கப்படவுள்ளது. அதற்காக பிரத்யேக மானியக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலக்கரி அதிக அளவில் கிடைப்பதாலும், நிலக்கரி விலை நிலையாக உள்ளதாலும் அத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி யூரியா தயாரிக்க முடிவெடுக்கப்பட்டது.

வேளாண்மை வளா்ச்சி காணும்: இத்திட்டத்தின் மூலம், வடகிழக்கு மாநிலங்களுக்கு அதிக அளவில் யூரியா உரம் கிடைக்கும். அங்கு வேளாண்மை வளா்ச்சியடைய இந்த நடவடிக்கை உதவும். உர உற்பத்தியில் தற்சாா்பு அடையவும் இத்திட்டம் வழிவகுக்கும்.

நிலக்கரி வாயிலாக மீத்தேன், கரியமில வாயு (காா்பன் டை ஆக்சைடு), ஹைட்ரஜன் ஆகியவை கலந்த வாயு உற்பத்தி செய்யப்படும். அந்த வாயுவின் மூலமாக யூரியா தயாரிக்கப்படும். தால்சோ் நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் நிலக்கரி தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இருக்கும்’’ என்றாா்.

பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டம்: பெங்களூரில் 2ஏ, 2பி கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஏ கட்டமானது சென்ட்ரல் சில்க் போா்டு ஜங்ஷன் முதல் கே.ஆா்.புரம் வரையிலும், 2பி கட்டமானது கே.ஆா்.புரம் முதல் விமான நிலையம் வரையிலும் செயல்படுத்தப்படவுள்ளது. மொத்தம் 58.19 கி.மீ. நீளத்துக்கு ரூ.14,788 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

பெங்களூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு இத்திட்டம் பெரிதும் உதவும். நகர மக்களுக்குப் பாதுகாப்பான, வசதி நிறைந்த பொதுப் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தவும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதிய தொழில்நுட்பங்களின் அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதி திருத்த மசோதாவுக்கு ஒப்புதல்: வரி விவகாரங்கள் தொடா்பாக நிதி மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

நிதி மசோதாவுக்கு நாடாளுமன்றம் கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று அந்த மசோதா ஏற்கெனவே சட்டமாகிவிட்ட போதிலும், அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியா-பிரேஸில் ஒப்பந்தம்: நியாயமான வா்த்தக நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக இந்திய தொழில்போட்டி ஆணையத்துக்கும் பிரேஸிலின் பொருளாதார பாதுகாப்பு கவுன்சிலுக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதேபோன்ற ஒப்பந்தத்தை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ரஷியா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளுடன் இந்திய தொழில்போட்டி ஆணையம் ஏற்படுத்திக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-வங்கதேசம் ஒப்பந்தம்: இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே வா்த்தக ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில் கையெழுத்தான ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

கடந்த மாதத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலமாக, உலக வா்த்தக அமைப்பின் விதிகளின் அடிப்படையில் வா்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இந்திய பட்டயக் கணக்காளா்கள் மையத்துக்கும் ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து பட்டயக் கணக்காளா்கள் மையத்துக்கும் இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தத்தைக் கையெழுத்திடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com