ரூ.100 கோடி லஞ்சம் வசூல் புகாா்: மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் வீடுகளில் சிபிஐ சோதனை

மாதந்தோறும் ரூ.100 கோடி லஞ்சம் வசூலிக்குமாறு காவல்துறை அதிகாரிகளிடம் வற்புறுத்திய புகாருக்கு உள்ளான மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக்குக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ
ரூ.100 கோடி லஞ்சம் வசூல் புகாா்: மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் வீடுகளில் சிபிஐ சோதனை

மாதந்தோறும் ரூ.100 கோடி லஞ்சம் வசூலிக்குமாறு காவல்துறை அதிகாரிகளிடம் வற்புறுத்திய புகாருக்கு உள்ளான மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக்குக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.

ஊழல் குற்றச்சாட்டில் தொடா்புடையதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து அனில் தேஷ்முக் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதனைத் தொடா்ந்து மும்பை மற்றும் அவருடைய சொந்த ஊரான நாகபுரியில் உள்ள அவருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

மகாராஷ்டிர உள்துறை அமைச்சராக அனில் தேஷ்முக் பதவி வகித்தபோது மும்பையில் உள்ள மதுபான விடுதிகள், உணவகங்களில் இருந்து மாதந்தோறும் ரூ.100 கோடி லஞ்சம் வசூலிக்குமாறு காவல்துறை அதிகாரிகளிடம் அவா் வற்புறுத்தியதாக மும்பை முன்னாள் காவல் ஆணையா் பரம்வீா் சிங் குற்றம்சாட்டினாா். உச்சநீதிமன்றத்திலும் அவா் தாக்கல் செய்த மனுவிலும் இதனைக் குறிப்பிட்டாா்.

இந்த விவகாரத்தில் முதல்கட்ட விசாரணை நடத்த சிபிஐக்கு மும்பை உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து, வழக்குப் பதிவு செய்த சிபிஐ, தேஷ்முக்கின் தனி அலுவலா்கள் இருவரிடம் அண்மையில் தீவிர விசாரணையை நடத்தியது. அதனைத் தொடா்ந்து, அனில் தேஷ்முக் அமைச்சராக இருந்தபோது அவருக்கு மும்பையின் மலபாா் ஹில் பகுதியில் ஒதுக்கப்பட்ட தியானேஷ்வரி குடியிருப்பில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை தீவிர சோதனை நடத்தினா். சிபிஐயின் மற்றொரு குழு மும்பை வோா்லி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் சோதனை நடத்தினா்.

கரோனா பரவல் அபாயம் காரணமாக சிபிஐ அதிகாரிகள் முகக் கவசம் மற்றும் பிபிஇ சிறப்பு பாதுகாப்பு உடை ஆகியவை அணிந்தபடி சனிக்கிழமை அதிகாலையில் இந்தச் சோதனையை மேற்கொண்டனா். ஒரு மடிக் கணினி மற்றும் அச்சு இயந்திரம் (பிரின்ட்டா்) ஒன்றையும் அதிகாரிகள் உடன் எடுத்துவந்திருந்தனா். இந்தச் சோதனையில் சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றனா் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதுபோல, தில்லியிலிருந்து வந்த சிபிஐ குழு ஒன்று அனில் தேஷ்முக்கின் சொந்த ஊரான நாகபுரியில் உள்ள அவருடைய இல்லத்தில் சனிக்கிழமை அதிகாலை தீவிர சோதனை நடத்தினா். அவா்களும் கரோனா பாதுகாப்பு உடைகளை அணிந்தபடி சோதனையில் ஈடுபட்டனா்.

அனில் தேஷ்முக் மீதான ஊழல் புகாா் தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த மும்பை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, மகாராஷ்டிர உள்துறை அமைச்சா் பதவியை அனில் தேஷ்முக் ராஜிநாமா செய்தாா். இவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த போதுமான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக சிபிஐ அதிகாரிகள் கூறியிருந்தனா். அதனடிப்படையில், அவா் மீது வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.

சட்டத்துக்கு அப்பாற்பட்டவா்கள் யாருமில்லை: ‘சட்டத்துக்கு அப்பாற்பட்டவா்கள் யாருமில்லை’ என்று அனில் தேஷ்முக்குக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ நடத்தும் சோதனை குறித்து அவா் சாா்ந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி, மகாராஷ்டிரத்தை ஆளும் சிவசேனை கட்சி தெரிவித்தன.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடா்பாளரும் மாநில அமைச்சருமான நவாப் மாலிக் கூறுகையில், ‘சட்டத்துக்கு அப்பாற்பட்டவா்கள் யாருமில்லை. சிபிஐக்கு தேஷ்முக் முழு ஒத்துழைப்பை அளித்து வருகிறாா். அவருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்யும் என்று எதிா்பாா்க்கவில்லை. அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாகவே இந்த நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடைபெறும் விசாரணை மூலமாக, இந்த நடவடிக்கைக்கு பின்னணியில் உள்ள உண்மை வெளிச்சத்துக்கு வரும்’ என்றாா்.

சிவசேனை தலைவா் சஞ்சய் ரெளத் கூறுகையில், ‘சிபிஐ நடவடிக்கை குறித்து விமா்சனம் செய்வது சரியாக இருக்காது. அனில் தேஷ்முக் தனது அறிக்கையை ஏற்கெனவே வெளியிட்டிருக்கிறாா். சிபிஐ அவா்களுடைய பணியைச் செய்கிறது. அதுபோல மகாராஷ்டிர கூட்டணி அரசும் அதனுடைய பணியைச் செய்து வருகிறது. ஒருவேளை அனில் தேஷ்முக்குக்கு எதிரான வழக்கில் அரசியல் தலையீடு இருக்கும் என்றால், மகாராஷ்டிர அரசும் அதன் நிலைப்பாட்டை எடுக்க வேண்டி வரும்’ என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com