ரத்த தானம் செய்யும் தன்னார்வலர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்முன் இதை மறக்க வேண்டாம்

மே 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
ரத்த தானம் செய்யும் தன்னார்வலர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்முன் இதை மறக்க வேண்டாம்
ரத்த தானம் செய்யும் தன்னார்வலர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்முன் இதை மறக்க வேண்டாம்


மே 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இது கரோனாவுக்கு எதிரானப் போரில் மிக முக்கிய மைல்கல்லாக அமைந்தாலும், மறுபக்கம், ரத்த தானம் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, ஒருவர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 28 நாள்கள் வரை அவர்களிடமிருந்து ரத்த தானம் பெற முடியாது என்கிறது தேசிய ரத்த தான கவுன்சில். அதோடு, இந்தியாவில் ரத்த தானம் வழங்கும் தன்னார்வலர்கள் பெரும்பாலும் 18 - 44 வயதுடையவர்கள்தான்.

எனவே, இந்த வயதுடையவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதன் மூலம், குறிப்பிட்ட காலத்துக்கு, குறிப்பிட்ட அளவில் ரத்த தானம் பெறுவது தடைபடும் என்றும், இதனால், ரத்த மாற்று சிகிச்சை அல்லது ரத்தம் செலுத்தப்பட வேண்டிய நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் முன் ரத்த தானம் வழங்கும் தன்னார்வலர்கள், ரத்த தானம் அளிக்க  வேண்டுமென மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதாவது, ஒருவர் முதல் தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டு 4 வாரத்துக்குப் பின் இரண்டாவது தவணையை செலுத்திக் கொள்ள வேண்டும். அதன்படி, ஒருவர் இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்ட பிறகு அதாவது 56 நாள்களுக்கு ரத்த தானம் செலுத்த முடியாது. 

எனவே, குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து ரத்த தானம் செய்யும் தன்னார்வலர்கள், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் முன்பு ரத்த தானம் செலுத்தி விட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த பல அமைப்புகள் முன் வந்துள்ளன.

சிவகங்கையைச் சேர்ந்த மருத்துவர் இது குறித்து கூறுகையில், போதுமான அளவுக்கு ரத்த தானம் பெறவில்லை என்றால், பிரசவகால உயிரிழப்புகள் அதிகரிக்கும். எனவே, தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களை, ஊசி போட வேண்டாம் என்று சொல்லாமல், ஊசி போடுவதற்கு முன்பு ரத்த தானம் வழங்குங்கள் என்று விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 

ஆனால், ரத்தக் கொடையாளர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சென்று கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளப்போவதில்லை. அதுமட்டுமல்லாமல், கரோனா தொற்று பரவல் காரணமாக அவசர சிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்படும், பல அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்படும் எனவே இது தேவையற்ற அச்சம் என்று ஒரு மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

ஏற்கனவே கேரளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த ஆண்டு ரத்த தான முகாம்கள் நடத்தப்படாததால், தற்போது தேவைப்படும் ரத்தம் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. எனவே, இளைஞர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்முன் ரத்த தானம் வழங்குமாறு கேரள முதல்வர் கேட்டுக் கொண்டிருந்தார்.

இது குறித்து விழிப்புணர்கள் பல்வேறு அமைப்பினரால் சமூக வலைத்தளத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பொதுச்செயலாளா் ஆா். ரமேஷ் வெளியிட்ட அறிக்கை:

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முன்களப் பணியாளா்கள், 45 வயதுக்கு மேற்பட்டவா்கள் உள்ளிட்டோருக்கு தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேல் உள்ளவா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

பொதுவாக, தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு (இரண்டு தவணை) 70 நாள்களுக்கு ரத்த தானம் செய்ய முடியாது. தற்போது கோடிக்கணக்கான இளைஞா்கள், தன்னாா்வலா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள இருக்கின்றனா். இதனால், அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை போன்றவைகளுக்கு ரத்தம் கிடைக்காமல் போய்விடக் கூடிய சூழல் ஏற்படும்.

எனவே, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் முன்னா் அனைவரும் ரத்த தானம் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com