பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: அசாம் - மிசோரம் கூட்டறிக்கை

மத்திய உள்துறை அமைச்சகம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் அசாம் - மிசோரம் மாநில அரசுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மத்திய உள்துறை அமைச்சகம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் அசாம் - மிசோரம் மாநில அரசுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

எல்லைப் பிரச்னை தொடர்பாக அசாம், மிசோரம் மாநில காவல்துறையினருக்கிடையே நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டால், கடந்த ஜூலை 26ஆம் தேதி அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஆறு காவலர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இரு மாநிலங்களை சேர்ந்த காவலர்கள், பொதுமக்கள் என பலர் காயமடைந்தனர்.

இந்த பிரச்னையில் தலையிட்ட மத்திய உள்துறை அமைச்சகம் இரு மாநில முதல்வர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், உடன்பாடு எட்டப்பட்டதாக இரு மாநில அரசுகளும் இன்று கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அறிக்கையில், “மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேச்சுவார்த்தை முயற்சியை இரு மாநில அரசுகள் வரவேற்கின்றன. மாநில எல்லைகளில் நிலவும் பதற்றத்தை போக்க அசாம் மற்றும் மிசோரம் மாநில முதல்வர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 26-ம் தேதி பலியானவர்களுக்கு மிசோரம் மாநிலம் தரப்பில் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற வாழ்த்து தெரிவிக்கப்படுகிறது.

மாநில எல்லைகளில் உள்ள பதற்றத்தை தணிக்க மத்திய அரசின் பாதுகாப்புப் படைகளை பணியமர்த்த இரு மாநிலங்களும் வரவேற்கின்றன. மேலும், மாநிலங்களின் காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளை எல்லைகளில் பணியமர்த்தப்படாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மாநில எல்லைகளில் வசிக்கும் மக்களின் மத்தியில் அமைதி திரும்ப தேவையான நடவடிக்கைகளை இரு மாநில அரசுகளும் எடுக்கும்” என தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com