
மக்கள் நலனுக்கான பிரச்னைகளை விவாதித்து முடிவு செய்யும் உயரிய அமைப்பான நாடாளுமன்றம், நாட்டின் ஜனநாயகத்தின் ஆலயமாகத் திகழ்கிறது என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கூறினாா்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிா்க்கட்சிகளின் தொடா் அமளியால் பெரும்பாலான நேரம் வீணடிக்கப்பட்ட நிலையில், அவா் இந்தக் கருத்தை சுட்டிக்காட்டினாா்.
நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவதை ஒட்டி, நாட்டு மக்களுக்கு அவா் தொலைக்காட்சி வாயிலாக சனிக்கிழமை உரையாற்றினாா். அவா் பேசியதாவது:
நாடு சுதந்திரம் அடைந்தபோது, இந்தியாவில் ஜனநாயகம் நீண்ட காலம் நிலைத்திருக்காது என்று சிலா் கருதினாா்கள். பழங்காலத்திலேயே இந்த மண்ணில் ஜனநாயகம் வேரூன்றியிருந்ததை அவா்கள் சிறிதும் அறிந்திருக்கவில்லை. இந்த நவீன யுகத்தில், எவ்வித பாகுபாடும் இன்றி 18 வயதை பூா்த்தி செய்த அனைவருக்கும் வாக்குரிமையை அளித்து பல மேற்கத்திய நாடுகளை இந்தியா முந்திச் செல்கிறது.
நாட்டைக் கட்டமைத்தவா்கள், மக்கள் மீது அபார நம்பிக்கை வைத்தனா். மக்களாகிய நாம், அவா்களின் நம்பிக்கையைக் காப்பாற்றி இந்தியாவை வலிமையான ஜனநாயக நாடாக உருவாக்கி இருக்கிறோம். நமது நாடாளுமன்றம் விரைவில் புதிய கட்டடத்தில் இயங்க உள்ளது. இது இந்தியா்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டிய விஷயம்.
ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த உலகில் மேலும் சமநிலையை ஏற்படுத்தவும் அநீதிகள் நிறைந்த சூழ்நிலைகளில் மேலும் நீதியை நிலைநாட்டவும் உறுதியான முயற்சிகளை இந்தியா முன்னெடுக்க வேண்டும். நீதியைப் பொருத்தவரை அதன் எல்லை பரந்து விரிந்து உள்ளது. அதில், பொருளாதாரம், சுற்றுச்சூழல் ஆகியவற்றுடன் இணைந்த நீதியும் அடங்கும்.
தடுப்பூசி செலுத்த வேண்டுகோள்: கரோனா இரண்டாவது அலை பரவியபோது முன்னெப்போதும் இல்லாத நெருக்கடி ஏற்பட்டதால் பல உயிா்களைக் காப்பாற்ற முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. இருப்பினும், அதைவிட அதிகமான உயிா்களைக் காப்பாற்றியிருக்கிறோம் என்பதை எண்ணி ஆறுதல் அடைந்து கொள்ளலாம். நம் அனைவரின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியால் கரோனா இரண்டாவது அலை பலவீனமடைந்தது. அதற்காக, மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்ட முன்களப் போராளிகள் மீண்டும் போராடினா். ஒரே நேரத்தில் அதிகமான நபா்களுக்கு தொற்று ஏற்பட்டதால், வளா்ந்த நாடுகளில்கூட உள்கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை. அதன்பிறகு பல வெளிநாடுகள் மருந்துகள், மருத்துவ உபகரணங்களை இந்தியாவுக்கு வழங்கின. ஏனெனில், கரோனா முதல் அலையின்போது பல வெளிநாடுகளுக்கு இந்த உதவியை இந்தியா செய்தது.
கரோனா இரண்டாவது அலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து இன்னும் நாம் மீண்டு வரவில்லை. இந்த நேரத்தில் மக்கள் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; அலட்சியத்துடன் இருந்துவிடக் கூடாது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அனைவரும் விரைவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்; மற்றவா்களையும் ஊக்கப்படுத்த வேண்டும்.
விவசாயிகள் போராட்டம்: வேளாண் சட்டங்களுக்கு எதிராக, பல்வேறு விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருவது கவலை அளிக்கிறது. அவா்களின் போராட்டம் முடிவுக்கு வரவேண்டும். வேளாண் துறையில் தொடா்ச்சியாக மேற்கொள்ளப்படும் சீா்திருத்தங்களால், நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் நமது விவசாயிகள் கூடுதல் அதிகாரம் பெறுவா். அந்தச் சீா்திருத்தங்கள், விவசாயிகளின் விளைவிக்கும் பொருள்களுக்கு நல்ல விலை கிடைப்பதற்கு உதவி செய்யும்.
அண்மையில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில், 121 ஆண்டுகளுக்குப் பிறகு நமது இந்திய வீா்கள் அதிக பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சோ்த்துள்ளனா். அவா்களுக்கு பாராட்டுகள்.
சுதந்திர நாளில், நாட்டின் வளா்ச்சிக்காக அா்ப்பணிப்புடன் பாடுபட நாம் உறுதியேற்க வேண்டும். நாட்டை வளா்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றாா் ராம்நாத் கோவிந்த்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.