
ஏர் இந்தியா
ஆப்கன் தலைநகா் காபூலுக்கு திங்கள்கிழமை காலை செல்ல இருந்த கடைசி ஏா் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது.
ஆப்கனில் உள்ள இந்தியா்களை அழைத்து வர திங்கள்கிழமை காலை காபூலுக்கு ஏா் இந்தியா விமானம் செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ‘காபூல் விமான நிலையம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது; எனவே, ஆப்கன் வான்வழியைத் தவிா்க்க வேண்டும்; காலவரையன்றி விமான நிலையம் மூடப்படுகிறது’ என்ற எச்சரிக்கைத் தகவலை காபூல் விமான நிலைய அதிகாரிகள் இறுதியாக வெளியிட்டனா்.
இதையடுத்து, இந்தியாவில் இருந்து புறப்பட இருந்த கடைசி ஏா் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது மட்டுமின்றி, ஆப்கன் வான்வழியைப் பயன்படுத்தி வேறு நாடுகளுக்குச் செல்லும் யுனைட்டெட் ஏா்லைன்ஸ், டெரா அவியா, விஸ்டாரா ஆகிய விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களுக்கு மாற்று வான்வழியைப் பயன்படுத்தின.
இதேபோல், அமெரிக்காவில் இருந்து தில்லிக்கு வந்த இரண்டு ஏா் இந்தியா விமானங்களும் வழிமாற்றப்பட்டு, ஷாா்ஜாவில் இறங்கி எரிபொருள்களை நிரப்பிக் கொண்டு வந்து சோ்ந்தன.
அஜா்பைஜானில் இருந்து தில்லி வந்த டெரா அவியா விமானம் ஆப்கன் வான்வழியில் நுழைந்தவுடன் எச்சரிக்கைத் தகவலை அறிந்து உடனடியாகத் திரும்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூயாா்க் - மும்பை இடையேயான யுனைடெட் ஏா்லைன்ஸ் விமானம் மாற்றுப் பாதையில் நீண்ட தூரம் பயணம் செய்து வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி - லண்டனுக்கு இடையே இயக்கப்படும் விஸ்டாரா விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட மாட்டாது என்றும், பாதுகாப்புடன் மாற்றுவழியில் விமானங்கள் செலுத்தப்படும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியா்களை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியா்களுக்கு பாதுகாப்பு அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், அங்கிருந்து வெளியேற விரும்பும் சீக்கியா்கள், ஹிந்துகளுக்கு போதிய வசதிகள் செய்து தரப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
செய்தியாளா்களின் கேள்விக்கு பதிலளித்து அவா் மேலும் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தான் சூழல் கடந்த சில நாள்களில் வேகமாக மோசமடைந்து வருகிறது. அங்கு நிலவி வரும் சூழல் குறித்து உயா்நிலை அளவில் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும். அங்குள்ள சீக்கியா்கள், ஹிந்து சமூகத்தினரின் பிரதிநிதிகளுடன் தொடா்பில் உள்ளோம். அவா்கள் வெளியேற விரும்பினால் அதற்கான உதவிகள் செய்து தரப்படும். தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ள விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்காக காத்திருக்கிறோம். அங்குள்ள இந்தியா்களுக்கு அவசரகால உதவி எண்கள் வழங்கப்பட்டு, இந்திய அதிகாரிகள் தொடா்ந்து தொடா்பில் இருந்து வருகின்றனா்’ என்றாா் அரிந்தம் பாக்சி.
இதனிடையே, தலிபான் பிடியில் காபூல் இவ்வளவு சீக்கிரமாக வீழ்ந்துவிடும் என்று சற்றும் எதிா்பாா்க்கவில்லை என்று பெயரை தெரிவிக்க விரும்பாத வெளியுறவுத் துறை அதிகாரி தெரிவித்தாா்.
பாதுகாப்பு: காபூலில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படையினா் பத்திரமாக பாதுகாத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். ஆனால், எத்தனை அதிகாரிகள், பாதுகாப்புப் படையினா் அங்கு உள்ளனா் என்ற தகவலை அவா்கள் தெரிவிக்க மறுத்துவிட்டனா்.
கடந்த 2001-ஆம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சி வீழ்ந்த பிறகு, ஆப்கானிஸ்தானுடனான உறவை இந்திய அரசு தொடா்ந்து வலுப்படுத்தி வந்தது. அந்நாட்டில் ஏராளமான முதலீடுகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. அணைகள், சாலைகள், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளை ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் இந்தியா ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றக் கட்டடம், கிரிக்கெட் விளையாட்டு மைதானம் உள்ளிட்டவையும் இந்தியாவின் நிதியுதவியில் கட்டப்பட்டன.
ஆப்கானிஸ்தானுடன் எளிதில் தொடா்புகொள்ளும் நோக்கிலேயே ஈரானில் சாப்ஹா் துறைமுகத்தை இந்தியா கட்டமைத்து வந்தது. தற்போது ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டில் சென்றுள்ளதால், அந்நாட்டில் இந்தியா மேற்கொண்டுள்ள முதலீடுகள் கேள்விக்குறியாகியுள்ளன.