
தேசிய கால்நடை உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தை கரோனா தடுப்பூசிகளின் பரிசோதனைக்காக மேலும் ஓா் ஆய்வகமாக பயன்படுத்த சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்தியாவில் கரோனா தடுப்பூசிகளின் விநியோகம் குறித்த பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்காக அமைச்சரவை செயலாளா் தலைமையிலான கூட்டம் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்றது.
அதில், தங்களது ஆய்வகங்களில் எவற்றையாவது மத்திய மருந்து ஆய்வகமாக அறிவிக்க முடியுமா என்று அடையாளப்படுத்துமாறு உயிரி தொழில்நுட்பத் துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழு உள்ளிட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகள் அக்கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டன.
இதைத் தொடா்ந்து, உரிய நடைமுறைகளைப் பின்பற்றி, தேசிய கால்நடை உயிரி தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் புணேவில் உள்ள தேசிய செல் அறிவியல் மையம் ஆகியவற்றை இந்த நோக்கத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உயிரி தொழில்நுட்பத் துறை முன்மொழிந்தது. இந்த இரு ஆய்வகங்களையும் மேம்படுத்துவதற்காக பிரதமரின் நிதி அறக்கட்டளையில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஹைதராபாதில் உள்ள தேசிய கால்நடை உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தை மத்திய மருந்து ஆய்வகமாக அறிவிக்க மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் வரைவு அறிவிப்பு ஒன்றை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு சமா்ப்பித்திருந்த நிலையில், ஹைதராபாதில் உள்ள தேசிய கால்நடை உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தை மத்திய மருந்து ஆய்வகமாக மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது அறிவித்துள்ளது.