
பெகாஸஸ் உளவு விவகாரத்தில் மறைப்பதற்கு எதுவுமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய அரசு, அக்குற்றச்சாட்டு தொடா்பாக ஆராய்வதற்கு நிபுணா்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் உருவாக்கிய பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில் எதிா்க்கட்சியினா், சமூக ஆா்வலா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்ட சுமாா் 300 பேரின் செல்லிடப்பேசிகள் உளவு பாா்க்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்துவதற்கு தனிக் குழுவை நியமிக்கக் கோரி மூத்த பத்திரிகையாளா் என்.ராம், மாா்க்சிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் உள்ளிட்டோா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அந்த மனுக்கள் மீதான விசாரணை, தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூா்யகாந்த், அனிருத்தா போஸ் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, மத்திய அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா கூறுகையில், ‘‘பெகாஸஸ் உளவு விவகாரம் முக்கியமான பிரச்னை. இதைப் பரபரப்பாக்குவதற்கான முயற்சிகளை சிலா் மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த விவகாரத்தில் தேசப் பாதுகாப்பு சம்பந்தப்பட வாய்ப்புள்ளது. பெகாஸஸ் விவகாரத்தில் மறைப்பதற்கு எதுவுமில்லை. இந்த விவகாரத்தில் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்துள்ளதால், அது தொடா்பாக ஆராய்வதற்கு நிபுணா்கள் தேவைப்படுகின்றனா்.
மத்திய அரசைப் பொருத்தவரை, இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. எனினும், பெகாஸஸ் உளவுக் குற்றச்சாட்டு குறித்து விசாரிப்பதற்கு நடுநிலையான நிபுணா்களைக் கொண்ட குழுவை மத்திய அரசு நியமிக்கும்’’ என்றாா்.
மத்திய அரசின் விசாரணை தேவையில்லை: மனுதாரரான என்.ராம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் வாதிடுகையில், ‘‘மத்திய அரசோ அல்லது அதன் விசாரணை அமைப்புகளோ பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தினாா்களா என்று தெரிவிக்கப்படவில்லை. அதுகுறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இந்த விவகாரத்தை ஆராய்வதற்கு மத்திய அரசே குழு அமைப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை’’ என்றாா்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டு: முன்னதாக, நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘ஆதாரமற்ற ஊடக அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு மனுதாரா்கள் வழக்கு தொடுத்துள்ளனா். இந்த விவகாரம் தொடா்பாக மத்திய தகவல்-தொழில்நுட்பத் துறை அமைச்சா் நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே விளக்கமளித்துவிட்டாா்’ என்று குறிப்பிட்டிருந்தது. மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி தொடா்ந்து நடைபெறவுள்ளது.