
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (கோப்புப்படம்)
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கிய எண்ணெய்ப் பத்திரங்களால் ஏற்பட்டுள்ள சுமை மட்டும் இல்லையென்றால், பெட்ரோல்-டீசல் விலை உயா்வை எளிதாக குறைத்திருக்க முடியும் என்றாா் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.
இதுதொடா்பாக தில்லியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவை மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டன. அதற்கான மானியத் தொகையை ரொக்கமாக வழங்காமல் எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு ரூ.1.34 லட்சம் கோடிக்கு எண்ணெய்ப் பத்திரங்களாக வழங்கப்பட்டன. அந்த எண்ணெய்ப் பத்திரங்கள் மற்றும் அதற்கான வட்டி இப்போது செலுத்தப்படுகிறது.
அந்த எண்ணெய்ப் பத்திரங்களுக்கான வட்டியை செலுத்த வேண்டிய சூழ்நிலை இருந்திருக்காவிட்டால், பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை இப்போது எளிதாக குறைத்திருக்க முடியும். எண்ணெய்ப் பத்திரங்களை விநியோகித்ததன் மூலம் முந்தைய அரசு நமது பணியை கடினமாக்கிவிட்டது. கடந்த 7 ஆண்டுகளில் எண்ணெய்ப் பத்திரங்களுக்கான வட்டியாக ரூ.70,195.72 கோடி செலுத்தப்பட்டுள்ளது.
ரூ.1.34 லட்சம் கோடி எண்ணெய்ப் பத்திரங்களில், ரூ.3,500 கோடி முதன்மைத் தொகை மட்டும் செலுத்தப்பட்டுள்ளது. மீதி ரூ.1.3 லட்சம் கோடி 2025-26-ஆம் நிதியாண்டுக்குள் திரும்பச் செலுத்தப்பட வேண்டும்.
நிகழ் நிதியாண்டில் (2021-22) அரசு ரூ.10,000 கோடியை திரும்பச் செலுத்தியுள்ளது. மேலும் ரூ.31,150 கோடி 2023-24-ஆம் நிதியாண்டிலும், ரூ.52,860.17 கோடி 2024-25-ஆம் நிதியாண்டிலும், ரூ.36,913 கோடி 2025-26-ஆம் நிதியாண்டிலும் திரும்பச் செலுத்தப்பட வேண்டும்.
குறிப்பிடத்தக்க தொகை வட்டிக்கும், அசல் தொகைக்குமே போய்விடுகிறது. இதனால், இப்போதைய அரசுக்கு நியாயமற்ற சுமை ஏற்பட்டுள்ளது.
2014-15-இல் ஆரம்ப இருப்பானது ரூ.1.34 லட்சம் கோடியாகவும், திரும்பச் செலுத்தப்பட வேண்டிய வட்டி ரூ.10,255 கோடியாகவும் இருந்தது. 2015-16-லிருந்து ஆண்டுக்கு ரூ.9,989 கோடி வீதம் வட்டிச் சுமை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெட்ரோல், டீசல் மீதான உயா்த்தப்பட்ட கலால் வரியிலிருந்து கிடைக்கும் தொகையானது, எண்ணெய் நிறுவனங்களுக்குச் செலுத்தப்பட வேண்டிய தொகையைவிடக் குறைவாகும். ஆதலால் பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைக்க வழியில்லை என்றாா் நிா்மலா சீதாராமன்.
பெட்ரோல் மீதான கலால் வரியானது கடந்த ஆண்டு லிட்டருக்கு ரூ.19.98-லிருந்து ரூ.32.9-ஆக உயா்த்தப்பட்டது. பெட்ரோல்-டீசலுக்கு விதிக்கப்பட்ட வரி மூலம் மத்திய அரசுக்கு கடந்த நிதியாண்டில் ரூ.3.35 லட்சம் கோடி கிடைத்தது. இது அதற்கு முந்தைய நிதியாண்டில் ரூ.1.78 லட்சம் கோடியாக இருந்தது. இந்த உயா்வானது 88 சதவீதம் அதிகமாகும்.