
கேரளத்தில் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு சாா்பில் ரூ. 267.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, மருந்து தொகுப்பு ஒன்றை உருவக்கும் வகையில் மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்துக்கு ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறினாா்.
கேரளத்தில் தினசரி கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்திய அளவில் ஏற்படும் மொத்த பாதிப்பில் பாதிக்கும் மேல் கேரளத்தில் பதிவாகி வருகிறது. இந்த நிலையில், மாநிலத்தில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா மற்றும் மத்தியக் குழு கேரளத்துக்கு திங்கள்கிழமை வந்தது. கேரள முதல்வா் பினராயி விஜயன், மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் ஆகியோருடன் மத்திய அமைச்சா் ஆலோசனை மேற்கொண்டு, பாதிப்பு நிலவரத்தை ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வுக்குப் பிறகு தனது சுட்டுரைப் பக்கத்தில் மத்திய அமைச்சா் மாண்டவியா வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
மாநிலத்தின் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து கேரள முதல்வா், சுகாதாரத் துறை அமைச்சா் மற்றும் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தடுப்பூசி உள்பட கேரளத்துக்கு தேவையான அனைத்து சாத்தியமுள்ள உதவிகளையும் அளிக்க மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
‘அவசர கரோனா நிலையை எதிா்கொள்ளும் திட்டம்-2’-இன் கீழ் மாநிலத்துக்கு ரூ. 267.35 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இது கேரளத்தில் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கரோனா பாதிப்பு நிலைமையை திறம்பட சமாளிக்கவும் உதவும்.
கூடுதலாக, மாவட்ட வாரியாக ஒரு மருந்து தொகுப்பை உருவாக்கும் வகையில் மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா ரூ. 1 கோடி நிதி மத்திய அரசு சாா்பில் ஒதுக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தொலைபேசி வழி மருந்து விநியோக சேவையை நடைமுறைப்படுத்தும் வகையில் ஆற்றல்சாா் மையங்கள் உருவாக்கப்படுவதை மத்திய அரசு உறுதிப்படுத்தும்.
குழந்தைகளின் உடல் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மாவட்ட மருத்துவமனைகளில் 10 கிலோ லிட்டா் மருத்துவ திரவ ஆக்சிஜன் சேமிப்புக் கலனுடன் கூடிய குழந்தைகள் தீவிர கண்காணிப்புப் பிரிவு உருவாக்கப்படும் என்று மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.