
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (கோப்புப்படம்)
முன்தேதியிட்ட வரி குறித்த விதிமுறைகள் விரைவில் வகுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியுள்ளதாவது:
2012-ஆம் ஆண்டின் முன்தேதியிட்ட வரி சட்டங்களை பயன்படுத்தி முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் நீக்குவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் இம்மாத தொடக்கத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதன் தொடா்ச்சியாக, கெய்ா்ன் எனா்ஜி, வோடஃபோன் போன்ற நிறுவனங்கள் மீதான முன்கூட்டிய வரி கோரிக்கைகளை ரத்து செய்ய வழிவகுக்கும் விதிமுறைகள் விரைவில் வகுக்கப்படும். முன்தேதியிட்ட வரி வழக்குகள், மறுநிதியளிப்பது தொடா்பாக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.
வலைதளம் சீரமைக்கப்படும்: புதிய வருமான வரி வலைதளத்தில் பல்வேறு பிரச்னைகள் இருப்பதை வரி செலுத்துவோா் சுட்டிக்காட்டியுள்ளனா். இதுதொடா்பாக, வலைதளத்தை வடிவமைத்த இன்ஃபோஸிஸ் நிறுவனத்துடனும், அதன் தலைவா் நந்தன் நிலேகனியுடனும் தொடா்ச்சியாக பேசி வருகிறேன். இப்பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும் என அவா்கள் உறுதியளித்துள்ளனா்.
பெட்ரோல் வரி குறைப்பு இல்லை: கடந்த 5 ஆண்டுகளில் எண்ணெய் கடன்பத்திரங்களுக்காக ரூ.60,000 கோடி வட்டியை மத்திய அரசு செலுத்தியுள்ளது. இன்னும், ரூ.1.30 லட்சம் கோடி செலுத்த வேண்டியுள்ளது. இதன் காரணமாகவே, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க இயலாத நிலை உள்ளது.
கட்டுக்குள் பணவீக்கம்: கடந்த சில மாதங்களாகவே ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரி வசூல் சிறப்பான அளவில் மேம்பட்டு வருகிறது. பண்டிகை காலம் வருவதால் கடன் வளா்ச்சி நன்றாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இது சந்தையில் போதுமான பணப்புழக்கத்தை உருவாக்கி தேவையை அதிகரிக்கச் செய்யும். நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் நிா்ணயிக்கப்பட்ட அளவிற்கு உள்ளாகவே இருக்கும்.
வோடஃபோனுடன் பேச்சுவாா்த்தை: கடன்சுமையில் சிக்கியுள்ள வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில் ஏராளமான அதிகாரிகள் அந்நிறுவனத்துடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா். ஆனால், இதுவரையில் எனது கவனத்துக்கு இப்பிரச்னை கொண்டுவரப்படவில்லை.
கிரிப்டோகரன்ஸி: கிரிப்டோகரன்ஸி என்றழைக்கப்படும் மெய்நிகா் நாணயம் தொடா்பான மசோதா ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது, தற்போது மத்திய அமைச்சரவை குழுவின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது என்றாா் அவா்.