
மத்தியப் பிரதேசத்தில் 60 வயது பெண்ணைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் சிங்க்ராலி மாவட்டத்தில் விந்த்யாநகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஜெயந்த் சவுக்கி ரயில்வே பாதை அருகே 60 வயது பெண், தன்னுடைய சகோதரியுடன் வீட்டிற்கு நடந்து சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் நடந்தபின்னர் மெதுவாக நடந்துசென்று காவல் நிலையத்தை அடைந்த அவர், ஐந்து பேர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் 18 வயதுக்குள்பட்ட இருவர் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அனில் சோங்கர், 'சிங்க்ராலி மாவட்டத்தில் பழங்குடியினப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 18 வயதிற்குட்பட்ட இருவர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த பெண்ணின் மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தற்போது போலீஸ் காவலில் உள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது' என்று தெரிவித்தார்.