
மாவட்ட ஆட்சியருடன் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி
மூன்று நாள் பயணமாக வயநாடு வந்துள்ள ராகுல் காந்தி இன்று மாவட்ட ஆட்சியருடன் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக தனது நாடாளுமன்றத் தொகுதியான வயநாடு வந்துள்ளார். வயநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்குபெற்று வருகிறார்.
இந்நிலையில், வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில், தொகுதியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் கரோனா நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக நேற்று காலை மானந்தவாடி பூங்காவில் மகாத்மா காந்தி சிலையைத் திறந்துவைத்த பின்னர் மானந்தவாடியில் சட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுடன் மதிய உணவு அருந்தினார். மேலும் அவர்களின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து மாணவிகளுடன் கலந்துரையாடினார்.