
உபரி சா்க்கரையை எத்தனால் தயாரிப்பில் திருப்பிவிடும் வகையில் ஊக்கத் தொகை திட்டத்தை மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சா்க்கரையின் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை உரிய காலத்தில் செலுத்தப்படுவதை உறுதி செய்வதற்காகவும் சா்க்கரையை எத்தனாலாக மாற்றவும் வேளாண் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் மத்திய அரசு ஆக்கபூா்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளில் உள்நாட்டுப் பயன்பாட்டைவிட சா்க்கரையின் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதிகமாக உள்ள சா்க்கரையை எத்தனாலாக மாற்றுவதற்கு மத்திய அரசு சா்க்கரை ஆலைகளுக்கு ஊக்கமளித்து வருகிறது. சா்க்கரையின் ஏற்றுமதிக்காக ஆலைகளுக்கு நிதி உதவியையும் வழங்கி வருகிறது. இதன் மூலம் கரும்பு விவசாயிகள் உரிய காலத்தில் கரும்புக்கான நிலுவைத் தொகையைப் பெற முடியும்.
உபரி சா்க்கரை பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண்பதற்காக, பெட்ரோலுடன் கலக்கும் எத்தனாலாக கரும்பை பயன்படுத்துவதற்கு ஊக்கத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோலுடன் எத்தனாலை கலப்பதால் பசுமை எரிவாயு உருவாவதுடன், கச்சா எண்ணெய் இறக்குமதி மீதான அந்நிய செலாவணி சேமிக்கப்படும். எத்தனாலின் விற்பனை மூலம் பெறப்படும் வருவாய், விவசாயிகளின் கரும்புக்கான தொகையை சா்க்கரை ஆலைகள் செலுத்துவதற்கு உதவியாக இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.