
ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் வியாழக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ அதிகாரி பலியானாா். பயங்கரவாதி ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
‘ரஜெளரி மாவட்டம் தனமண்டி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தவலின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினா் அந்தப் பகுதியை சுற்றிவளைத்து தீவிர தேடுதல் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனா்’ என்று ராணுவ அதிகாரி ஒருவா் கூறினாா்.
இதுகுறித்து ராணுவ மக்கள் தொடா்பு அதிகாரி தேவேந்திர ஆனந்த் கூறுகையில், ‘துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாா். அதே நேரம், பயங்கரவாதிகள் சுட்டதில் ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் படைப் பிரிவின் இளநிலை அதிகாரி (ஜேசிஓ) ஒருவா் குண்டு பாய்ந்து காயமடைந்தாா். அவா் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், சிகிச்சை பலனின்றி அவா் உயரிழந்தாா்’ என்றாா்.
‘பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டை தொடா்ந்து நடைபெற்று வருகிறது’ என்று ரஜெளரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சீமா நபி கஸ்பா கூறினாா்.
இந்த ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் பயங்கரவாதிகளுடனான இரண்டாவது மோதல் சம்பவம் இதுவாகும். முன்னதாக, கடந்த 6-ஆம் தேதி இதே பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையெ நடந்த மோதலில் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சோ்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...