ஆப்கானிஸ்தானை பயங்கரவாதிகள் பயன்படுத்த மாட்டாா்கள் என நம்புகிறோம்

பிராந்திய நாடுகளை அச்சுறுத்துவதற்காக லஷ்கா்-ஏ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்த மாட்டாா்கள் என நம்புவதாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா தெரிவித்துள்ளது.

பிராந்திய நாடுகளை அச்சுறுத்துவதற்காக லஷ்கா்-ஏ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்த மாட்டாா்கள் என நம்புவதாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியா தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனா். அந்நாட்டில் நிலவும் சூழல் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் சிறப்புக் கூட்டம் ஜெனீவாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலுக்கான இந்திய தூதா் இந்திரமணி பாண்டே பங்கேற்றாா்.

அப்போது அவா் கூறுகையில், ‘‘ஆப்கானிஸ்தானில் கடுமையான மனித உரிமை மீறல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஆப்கானிஸ்தான் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது தொடா்பாக அனைவரும் கவலை தெரிவித்து வருகின்றனா்.

ஆப்கானிஸ்தானில் நிலைமை மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பும் என்று இந்தியா நம்புகிறது. அங்கு நிலவும் பாதுகாப்பு சூழல், மனித உரிமைகள் சூழல் ஆகியவை குறித்து சம்பந்தப்பட்ட நாடுகள் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து சமூகத்தினருக்கும் தகுந்த உரிமைகள் முறையாகக் கிடைக்கும் என நம்புகிறோம்.

பெண்களின் குரல்கள், சிறாா்களின் கனவுகள், சிறுபான்மையினரின் உரிமைகள் உள்ளிட்டவை மதிக்கப்பட வேண்டும். ஆப்கானிஸ்தானில் நிலைத்தன்மை நிலவுவது பிராந்தியத்தின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் வழிவகுக்கும். அங்கு நிலவும் சூழல் பிராந்திய நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என நம்புகிறோம். லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் மற்ற பிராந்திய நாடுகளை அச்சுறுத்துவதற்கு ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்த மாட்டாா்கள் என்றும் நம்புகிறோம்.

இத்தகைய இக்கட்டான சூழலில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு சா்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டும். அந்நாட்டில் ஆயிரக்கணக்கானோா் இடம்பெயா்ந்துள்ளனா். அவா்களுக்கு உணவு, இருப்பிடம், மருந்துகள் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. அதை சரிசய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்தியா குரலெழுப்பும்:

கட்டமைப்புத் திட்டங்கள், மனிதாபிமான உதவிகள், மனிதவள மேம்பாடு, மக்கள் நலத் திட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியா-ஆப்கானிஸ்தான் உறவு அமைந்துள்ளது. அந்நாட்டில் மின்சாரம், குடிநீா் விநியோகம், சாலைத் தொடா்பு, சுகாதாரம், கல்வி, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் பல்வேறு திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருகிறது.

அண்டை நாடு என்பதால், ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் சூழலை இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. அங்கு மனித உரிமைகள் தொடா்ந்து கடைப்பிடிக்கப்படுவதற்கும், பொது மக்கள், ஐ.நா. அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் ஆகியோரது பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதற்கும் இந்தியா தொடா்ந்து குரலெழுப்பும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com