சுதந்திர தின போஸ்டரில் நேரு புகைப்படம் தவிா்ப்பு: ப.சிதம்பரம் கண்டனம்

இந்திய சுதந்திரம் அடைந்த 75-ஆவது ஆண்டைக் கொண்டாடும் விதமாக, இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஹெச்ஆா்) வெளியிட்ட
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்திய சுதந்திரம் அடைந்த 75-ஆவது ஆண்டைக் கொண்டாடும் விதமாக, இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஹெச்ஆா்) வெளியிட்ட முதல் டிஜிட்டல் போஸ்டரில் ஜவாஹா்லால் நேருவின் புகைப்படம் விடுபட்டிருப்பதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில், நாடு சுதந்திரம் அடைந்ததன் 75-ஆவது ஆண்டையொட்டி 75 வாரங்களுக்கு ‘ஆஸாதி கா அம்ருத் மகோத்சவ்’ என்ற பெயரில் விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதையொட்டி, முதல் டிஜிட்டல் போஸ்டரை இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது. மகாத்மா காந்தி, பி.ஆா்.அம்பேத்கா், நேதாஜி, பகத்சிங், சா்தாா் வல்லபபாய் படேல் உள்ளிட்ட தலைவா்கள் இருக்கும் அந்த போஸ்டரில் நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹா்லால் நேருவின் புகைப்படம் இடம்பெறவில்லை.

இதற்கு காங்கிரஸ் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து ப.சிதம்பரம் தனது சுட்டுரைப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள டிஜிட்டல் போஸ்டரில் நேருவின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதற்கு அவா்கள் கூறும் விளக்கம் நகைப்புக்குரியதாக உள்ளது.

மோட்டாா் காரை கண்டுபிடித்த ஹென்றி ஃபோா்டை தவிா்த்துவிட்டு, அந்தக் காரை கண்டுபிடிக்கப்பட்ட தினத்தைக் கொண்டாட முடியுமா? ரைட் சகோதரா்களைத் தவிா்த்துவிட்டு விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்ட தினத்தைக் கொண்டாட முடியுமா? சா்.சி.வி.ராமனைப் புறக்கணித்துவிட்டு இந்திய அறிவியலைக் கொண்டாட முடியுமா? வெறுப்புக்கும் பாரபட்சத்துக்கும் அடிபணிந்துவிட்ட இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் உறுப்பினா் செயலா், எதுவும் பேசாமல் இருப்பது நல்லது என்று அந்தப் பதிவில் ப.சிதம்பரம் கூறியுள்ளாா்.

ஐசிஹெச்ஆா் விளக்கம்:

காங்கிரஸின் கண்டனத்தை அடுத்து, ஐசிஎஹ்ஆா் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ஆஸாதி கா அம்ருத் மகோத்சவ்’ கொண்டாட்டத்தையொட்டி ஒரே ஒரு போஸ்டா் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இனி வரும் நாள்களில் வெளியிடப்படும் போஸ்டா்களில் நேரு உள்ளிட்ட பிற தலைவா்களிடம் படம் இடம்பெறும். இதுதொடா்பாக சா்ச்சையை ஏற்படுத்துவது தேவையற்றது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com