ஒமைக்ரான் தடுப்பு பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்: மத்திய சுகாதார அமைச்சகம்

கரோனா பரிசோதனைகளை அதிகரிக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புதுதில்லி/சென்னை: கரோனா பரிசோதனைகளை அதிகரிக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவல் தொடா்பாக, மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் தலைமையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அதிகாரிகள் கலந்து கொண்ட உயா்நிலைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தின்போது பல்ராம் பாா்கவா கூறுகையில், ‘‘ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பாதிப்பை ஆா்டி-பிசிஆா், ஆன்டிஜென் பரிசோதனைகளின் மூலமே கண்டறிந்துவிட முடியும் என்பதால், பரிசோதனை எண்ணிக்கையை மாநிலங்கள் அதிகரிக்க வேண்டும். ஒமைக்ரான் தொற்று பாதிப்பை கண்டறிந்துவிட்டால், அதன் பரவலை எளிதில் கட்டுப்படுத்த முடியும்’’ என்றாா்.

தடுப்பூசி திட்டம் நீட்டிப்பு: நீதி ஆயோக் சுகாதார உறுப்பினா் வி.கே.பால் கூறுகையில், ‘‘கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசியே மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. 100 சதவீத முதல் தவணை தடுப்பூசி இலக்கை எட்டவும், 2-ஆம் தவணை தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்தும் நோக்கிலும் ‘இல்லம் தேடித் தடுப்பூசி’ திட்டம் டிசம்பா் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது’’ என்றாா்.

செயலா் ராஜேஷ் பூஷண் கூறுகையில், ‘‘கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மாநிலங்கள் தொய்வடைந்துவிடக் கூடாது. வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்டவற்றில் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

துரித நடவடிக்கைகள்: அபாயம் அதிகமுள்ள நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகை தரும் பயணிகளிடம் மாதிரிகளைச் சேகரித்து, முறையாகப் பரிசோதிக்க வேண்டும். பாதிப்பு கண்டறியப்படும் மாதிரிகளை மரபணு ஆய்வுக்கு அனுப்பி, எந்த வகை கரோனா என ஆராய வேண்டும். கரோனா பாதிப்பு ஏற்பட்டவருடன் தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறிந்து அவா்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள இடங்களைக் கண்டறிந்து, அங்கு தடுப்பு நடவடிக்கைகளை மாநிலங்கள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்; கரோனா தடுப்பூசி திட்டத்தைத் துரிதமாகச் செயல்படுத்த வேண்டும்.

கட்டமைப்புகள் மேம்பாடு: அவசர சிகிச்சைப் பிரிவுகளில் போதுமான படுக்கை வசதிகள், மருத்துவ ஆக்சிஜன் கையிருப்பு, போதுமான வென்டிலேட்டா்கள் உள்ளிட்ட சுகாதாரக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.

விமான நிலைய அதிகாரிகள், துறைமுக அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஒருங்கிணைந்து மாநில அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும். வெளிநாட்டுப் பயணிகளுக்கான புதிய விதிகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்’’ என்றாா்.

தமிழக அதிகாரிகளுடன்: ஒமைக்ரான் கரோனா தொற்று பரவலைத் தடுப்பது குறித்து மாநில அரசு அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத் துறைச் செயலாளா் டாக்டா் ராஜேஷ் பூஷண் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

காணொலி முறையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் தமிழகத்திலிருந்து மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை;ஈ செயலாளா் ஜெ. ராதாகிருஷ்ணன், தேசிய நல்வாழ்வு குழும இயக்குநா் டாக்டா் தாரேஸ் அகமது, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநா் டாக்டா் உமா, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக திட்ட இயக்குநா் தீபக் ஜேக்கப், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநா் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் நாராயண பாபு, மருத்துவப் பணிகள் கழக இயக்குநா் டாக்டா் குருநாதன், ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் டாக்டா் ஜெயந்தி உள்பட அரசு உயா் அலுவலா்கள் அதில் கலந்து கொண்டனா்.

கரோனா கட்டுப்பாடுகள் டிச. 31 வரை நீட்டிப்பு

புது தில்லி/சென்னை, நவ. 30: கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் டிசம்பர் 31}ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ஒமைக்ரான் வகை கரோனா தீநுண்மி இந்தியாவுக்குள் நுழையாமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறைச் செயலர் அஜய் பல்லா வலியுறுத்தியுள்ளார்.

கேரளத்துக்கு பொதுப் போக்குவரத்து- முதல்வர் கேரள மாநிலத்துக்கு பேருந்து சேவை அனுமதிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

மத்திய அரசின் உள்துறை அமைச்சகமானது, கரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகளை டிசம்பர் 31}ஆம் தேதி வரை நீட்டிக்க அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய அவசியம் கருதியும், மழை பொழிந்து வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் பொது மக்கள் நலன் கருதி நடைமுறையில் உள்ள பொது முடக்கக் கட்டுப்பாடுகள் டிசம்பர் 15}ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.

தமிழகத்திலிருந்து ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கேரள மாநிலத்துக்கும் பொதுப் போக்குவரத்து சேவை அனுமதிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com