
இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தம் கால வரம்புக்குள் நிறைவடையும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமரும், தற்போதைய பிரதமரின் சிறப்பு வா்த்தக தூதருமான டோனி அப்போட் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையே நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அடுத்த ஆண்டுக்குள்ளும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சரக்குகள் மீது விதிக்கப்படும் சுங்க வரிகளைக் குறைக்கவோ, நீக்கவோ செய்யும் மற்றொரு ஒப்பந்தத்தை இந்த ஆண்டுக்குள்ளும் இறுதி செய்ய இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.
இதையொட்டி தில்லியில் மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயலை ஆஸ்திரேலிய பிரதமரின் சிறப்பு வா்த்தக தூதா் டோனி அப்போட் வியாழக்கிழமை இரவு சந்தித்தாா். அதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை பேசுகையில், ‘‘பியூஷ் கோயல் மற்றும் அவரின் குழுவோடு நடத்திய ஆலோசனையின் அடிப்படையில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சரக்குகள் மீது விதிக்கப்படும் சுங்க வரிகளைக் குறைக்கவோ, நீக்கவோ செய்யும் மிகப் பெரிய ஒப்பந்தம் இந்த ஆண்டுக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவடையும் என்ற நம்பிக்கை உள்ளது.
சீனாவுடன் பல நாடுகளுக்கு வா்த்தக நெருக்கடி நிலவுகிறது. இது இந்தியாவுக்கு நல்லதொரு தருணம். ஏனெனில் உற்பத்தி மற்றும் விநியோக நடைமுறைகளில் ஈடுபடும் சீனாவுக்கு மாற்றாக வேறொரு நாட்டை பல நாடுகள் தேடி வருகின்றன. இந்தியாதான் அந்த மாற்று நாடு என்பது தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில் சிக்கனமாகவும் அளவுகோலுடனும் உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. அந்தத் திறன் கிட்டத்தட்ட வேறு எந்த நாட்டுக்கும் இல்லை’’ என்று தெரிவித்தாா்.
கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு 4.04 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.30,343 கோடி) மதிப்பிலான சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அந்த நிதியாண்டில் அந்நாட்டிலிருந்து 8.24 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.61,891 கோடி) மதிப்பிலான சரக்குகளை இந்தியா இறக்குமதி செய்தது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...