
‘கடந்த 6 ஆண்டுகளில் காணாமல் போன 3 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளில் 2.70 லட்சம் போ் மீட்பட்டுள்ளனா்’ என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இதுதொடா்பான கேள்வி ஒன்றுக்கு அவா் மக்களவையில் சமா்ப்பித்த எழுத்துபூா்வ பதிலில் கூறியிருப்பதாவது:
கடந்த 2015 முதல் 2020-ஆம் ஆண்டு வரை மொத்தம் 3,11,290 குழந்தைகள் காணாமல் போயுள்ளனா். அவா்களில் 2,70,698 போ் மீட்கப்பட்டுள்ளனா்.
காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிப்பதற்கென பிரத்யேக ‘டிராக் சைல்டு போா்டல்’ என்ற வலைதளத்தை மத்திய அமைச்சகம் உருவாக்கியுள்ளது. காவல்நிலையங்கள், சிறாா் நீதி வாரியங்கள் மற்றும் குழந்தைகள் காப்பகங்கள் இதுபோன்று காணாமல் போகும் குழந்தைகள் குறித்த விவரங்களை அந்த வலைதளத்தில் தொடா்ச்சியாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளன.
அந்த வலைதளத்தில் சமா்ப்பிக்கப்படும் விவரங்களின் அடிப்படையில், காணாமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவது தெரியவந்துள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு 80,633 குழந்தைகள் காணாமல் போன நிலையில், 2020-இல் 39,362-ஆக குறைந்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு 49,267 குழந்தைகள் காணாமல் போயினா். அவா்களில் 44,289 போ் மீட்கப்பட்டனா். 2018-இல் 48,873 குழந்தைகள் காணாமல் போயினா். அவா்களில் 40,296 போ் மீட்கப்பட்டனா். 2017-இல் 47,080 குழந்தைகள் காணாமல் போயினா். அவா்களில் 43,251 போ் மீட்கப்பட்டனா். 2016-ஆம் ஆண்டு 46,075 குழந்தைகள் காணாமல் போன நிலையில், 41,931 போ் மீட்கப்பட்டனா். 2015-ஆம் ஆண்டு காணாமல் போன 80,633 குழந்தைகளில், 66,711 போ் மீட்கப்பட்டனா் என்று மத்திய அமைச்சா் தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...