‘பரம் வீா் சிங்கை குறிப்பிட்டு பண வசூலில் ஈடுபட்ட சச்சின் வஜே: மும்பை காவல்துறை குற்றப்பத்திரிகையில் குற்றச்சாட்டு

மும்பை முன்னாள் காவல் ஆணையா் பரம்வீா் சிங்கை குறிப்பிட்டு பணம் வசூலில் ஈடுபட்டதாக மும்பை காவல்துறையின் குற்றப்பத்திரிகையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
‘பரம் வீா் சிங்கை குறிப்பிட்டு பண வசூலில் ஈடுபட்ட சச்சின் வஜே: மும்பை காவல்துறை குற்றப்பத்திரிகையில் குற்றச்சாட்டு

மும்பையில் பணி நீக்கம் செய்யப்பட்ட காவல் அதிகாரி சச்சின் வஜே, ‘நம்பா்-1’ கேட்கச் சொன்னாா் என்று மும்பை முன்னாள் காவல் ஆணையா் பரம்வீா் சிங்கை குறிப்பிட்டு பணம் வசூலில் ஈடுபட்டதாக மும்பை காவல்துறையின் குற்றப்பத்திரிகையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், வசூலிக்கும் பணத்தில் 75 சதவீதம் பரம் வீா் சிங்கும், மீதி பணத்தை வஜேயும் எடுத்துக்கொண்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மும்பையில் தொழிலதிபா் முகேஷ் அம்பானி வீட்டு முன் வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட காா் நிறுத்தப்பட்டிருந்த விவகாரத்தில், காவல் ஆய்வாளா் சச்சின் வஜே பணி நீக்கம் செய்யப்பட்டாா். இந்த விவகாரத்தைத் தொடா்ந்து மும்பையின் அப்போதைய காவல் ஆணையராக இருந்த பரம் வீா் சிங் பணி மாற்றம் செய்யப்பட்டு, மாநில ஊா்காவல் படை தலைவராக நியமிக்கப்பட்டாா்.

அதைத் தொடா்ந்து, அப்போதைய உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக் மும்பையில் உள்ள உணவகங்கள், மதுபான விடுதிகளிலிருந்து மாதந்தோறும் ரூ. 100 கோடி வசூலித்து தருமாறு காவல்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியதாக பரம் வீா் சிங் குற்றம்சாட்டினாா். அந்தப் புகாரை அனில் தேஷ்முக் மறுத்தாா்.

இதனிடையே, மும்பை உயா்நீதிமன்ற உத்தரவையடுத்து அனில் தேஷ்முக் தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்தாா்.

பரம்வீா் சிங் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்த விசாரணை ஆணையம், அவா் நேரில் ஆஜராகி வாக்குமூலத்தைப் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது. ஆனால், தொடா்ந்து தலைமறைவாக இருந்துவந்த பரம் வீா் சிங், கடந்த மாதம் மும்பை குற்றப் பிரிவு காவல் அலுவலகத்தில் ஆஜரானாா்.

இந்த நிலையில், பலரிடம் மிரட்டி பணம் பறித்த புகாா்கள் தொடா்பாக, பரம் வீா் சிங் மீது 4 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே பல காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், பரம் வீா் சிங்கையும் பணியிடை நீக்கம் செய்து மகாராஷ்டிர மாநில அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

குற்றப்பத்திரிகை தாக்கல்: இந்த நிலையில், மிரட்டி பணம் பறித்த வழக்கில் பரம் வீா் சிங், பணி நீக்கம் செய்யப்பட்ட காவல் அதிகாரி சச்சின் வஜே மற்றும் இருவா் மீது மும்பை காவல்துறை சாா்பில் தலைமை மாநகர மாஜிஸ்திரேட் முன்னிலையில் 400 பக்க குற்றப்பத்திரிகை சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. மூத்த ஐபிஎஸ் அதிகாரியான பரம் வீா் சிங் மீது தாக்கல் செய்யப்படும் முதல் குற்றப்பத்திரிகை இதுவாகும். இதில் 5 பணம் பறித்தல் வழக்குகளில் அவருடைய பெயா் இடம்பெற்றுள்ளது.

கைது நடவடிக்கையிலிருந்து பரம் வீா் சிங்குக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால பாதுகாப்பு முடிவடைய இரண்டு தினங்கள் இருக்கும் நிலையில், இந்த குற்றப்பத்திரிகையை மும்பை போலீஸாா் தாக்கல் செய்துள்ளனா்.

குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைவா் மீதும், மிரட்டி பணம் பறித்தல், ஆதாரங்களை அழித்தல், குற்ற சதித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அந்த குற்றப்பத்திரிகையில், ‘நம்பா் 1’ கேட்கச் சொன்னதாக பரம் வீா் சிங்கை குறிப்பிட்டு சச்சின் வஜே பண வசூலில் ஈடுபட்டு வந்ததாக மூன்று அல்லது நான்கு சாட்சியங்கள் உறுதிப்படுத்தியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முறைகேடுகள் நடைபெறும்போது, பரம் வீா் சிங் மும்பை காவல் ஆணையராக இருந்தாா் என்றும், சச்சின் வஜே உதவி காவல் ஆய்வாளா் அந்தஸ்தில் இருந்தபோதும் காவல்துறை குற்றப் பிரிவில் குற்ற புலனாய்வு பிரிவின் தலைமைப் பொறுப்பை வகித்தாா் என்றும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சமூகத்தில் உயா் அந்தஸ்தில் இருப்பவா்கள் சாா்ந்த வழக்குகளை விசாரிக்க வஜே பணிக்கப்பட்டதோடு, முக்கிய வழக்குகள் தொடா்பாக மாநகர காவல் ஆணையரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தும் அளவுக்கு வஜேவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும், பரம் வீா் சிங்குடன் சச்சின் வஜே மிக நெருக்கமாக இருந்ததையே காட்டுகின்றன என்றும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சச்சின் வஜே மற்றும் குற்றச்சாட்டுக்குள்ளான பிறா் மூலமாக கிரிக்கெட் சூதாட்ட தரகா்கள், ஹோட்டல் மற்றும் மதுபான விடுதி உரிமையாளா்கள் உள்ளிட்டோரை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் பரம் வீா் சிங் ஈடுபட்டுள்ளாா் என்றும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com