‘நாகலாந்து சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியது ராணுவம்’: மக்களவையில் அமித் ஷா

நாகலாந்து துப்பாக்கிச் சூட்டிற்கு இந்திய ராணுவம் மன்னிப்பு கோரியுள்ளதாக மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை விளக்கம் அளித்தார்.
‘நாகலாந்து சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியது ராணுவம்’: மக்களவையில் அமித் ஷா

நாகலாந்து துப்பாக்கிச் சூட்டிற்கு இந்திய ராணுவம் மன்னிப்பு கோரியுள்ளதாக மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை விளக்கம் அளித்தார்.

நாகலாந்து மாநிலத்தில் சனிக்கிழமை இரவு பொதுமக்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் எனத் தவறாக நினைத்து ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், 13 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து நடந்த வன்முறையில், பொதுமக்கள் தரப்பிலிருந்து மேலும் ஒருவர் மற்றும் ஒரு ராணுவ வீரர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து மக்களவையில் அமித் ஷா பேசுகையில்,

சனிக்கிழமை இரவு சம்பவம் நடந்த இடத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து 21ஆம் படை பிரிவை சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அந்த வழியே வந்த வாகனத்தை நிறுத்தினர், ஆனால் வாகனத்தை தொடர்ந்து செலுத்தியதால் அதில் தீவிரவாதிகள் இருப்பதாக கருதி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

பின்பு வாகனத்தை சோதனை செய்ததில் தவறுதலாக சுட்டது தெரிய வந்துள்ளது. வாகனத்தில் இருந்த 8 பேரில் 6 பேர் சம்பவம் இடத்திலேயே பலியாகினர். மீதமுள்ள இருவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு ராணுவ வீரர்கள் கொண்டு சென்றனர். சிறிது நேரத்தில் தகவலறிந்த கிராம மக்கள் ராணுவ வாகனத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.

இதில், ஒரு வீரர் பலியானார், மற்றவர்கள் காயமடைந்தனர். இந்த தாக்குதலின் போது தற்காப்பிற்காக ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் 7 பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.

இதனை தொடர்ந்து டிசம்பர் 5ஆம் தேதி அசாம் ரைப்பிள் முகாமிற்குள் நுழைந்த 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாமை அடித்து நொறுக்கினர். இந்த முகாமில் கூட்டத்தை கட்டுப்படுத்த நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.

நாகலாந்தின் தற்போதை நிலை பதற்றமாக இருந்தாலும் கட்டுக்குள் உள்ளது. நாகலாந்து காவல்துறை இயக்குநரும், காவல் ஆணையரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். மாநில குற்றவியல் காவல்துறையிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிறப்பு விசாரணைக் குழுவானது ஒரு மாதத்திற்குள் முழு அறிக்கையையும் தாக்கல் செய்யும்.

பாதிக்கப்பட்ட இடங்களில் அசம்பாவிதம் நிகழாமல் இருக்க பாதுகாப்புப் படையினர் அமர்த்தப்பட்டுள்ளனர். ராணுவத்தின் தலைமையகம் வெளியிட்ட பத்திரிகை செய்தியில், எதிர்பாராமல் நடந்த அப்பாவி மக்களின் உயிரிழப்பிற்கு மன்னிப்பு கோரியுள்ளது.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் நாகலாந்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். அவரது தலைமையில், தலைமைச் செயலாளர், மூத்த அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையில், இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் வருங்காலத்தில் நடக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மத்திய அரசு கண்காணித்து வருகின்றது. இயல்பு நிலைக்கு திரும்ப அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாகலாந்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு மத்திய அரசு வருதத்தை தெரிவித்துக் கொள்கிறது. மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.

தொடர்ந்து மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சியினரின் கடும் அமளிக்கு மத்தியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த விளக்கத்தை அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com