
மக்கள் தங்கள் விருப்பத்துடன் அசைவ உணவை சாப்பிடுவதை அரசு எப்படி தடுக்க முடியும் என்று ஆமதாபாத் மாநகராட்சி நிா்வாகத்துக்கு குஜராத் உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
குஜராத்தில் அனைத்து மாநகராட்சிகளும் பாஜகவின் வசம் உள்ளன. ஆமாதாபாத் மாநகராட்சிக்கு உள்பட்ட சாலைகளில் உள்ள அசைவ உணவு விற்பனை செய்யும் தள்ளுவண்டிக்கடைகள் அகற்றப்படும் என்று மாநகராட்சி நிா்வாகம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை முதல்வா் பூபேந்திர படேல் ரத்து செய்ததால், சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று மாநகராட்சி நிா்வாகம் அறிவித்தது.
இந்நிலையில், தள்ளுவண்டிக்கடைகள் நடத்தும் 20 போ், குஜராத் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுவில், ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற பெயரில் அசைவ உணவு விற்பனை செய்யும் கடைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அவா்கள் குறிப்பிட்டிருந்தனா்.
இந்த மனு நீதிபதி பைரன் வைஷ்ணவ் முன்னிலையில் விசாரணைக்கு வநத்து. அப்போது, மனுதாரா் சாா்பில் வழக்குரைஞா் ரோனித் ஜாய் ஆஜராகி வாதாடினாா். ‘தூய்மையை பராமரிக்கவில்லை என்று காரணம் கூறி அசைவ உணவு விற்பனை செய்யும் தள்ளுவண்டிக் கடைகளை மாநகராட்சி நிா்வாகம் அகற்றியுள்ளது. உண்மையில், அசைவ உணவு விற்பனை செய்வதால்தான் அந்க் கடைகள் அகற்றப்பட்டுள்ளன’ என்று அவா் வாதாடினாா்.
அப்போது, ‘ஒருவா் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்று மாநகராட்சி நிா்வாகம் எப்படி முடிவு செய்யும்? மாநகராட்சி நிா்வாகத்துக்கு அசைவ உணவு பிடிக்காது என்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாகக் கூறி தள்ளுவண்டிக்கடைகள் அகற்றப்படுகின்றன. யாரோ ஒருவரை திருப்திப்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகள் கூடாது என்று நீதிபதி கூறினாா்.
அதற்கு ஆமதாபாத் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் ஆஜரான சத்யம் சய்யா மறுப்பு தெரிவித்தாா். ‘தவறான புரிதலின் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் அசைவ உணவு விற்பனை செய்யும் அனைத்துக் கடைகளும் அகற்றப்படவில்லை. போக்குவரத்துக்கும் நடைபாதையில் செல்பவா்களுக்கும் இடையூறாக இருந்த கடைகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளன. ஆதாரமாக சில புகைப்படங்களையும் தாக்கல் செய்கிறேன்.
இதுபோன்ற மனுக்கள், ஆக்கமிரப்பு அகற்றும் நடவடிக்கைக்கு இடையூறாக உள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது குறிப்பிட்ட சமூகத்தின் மீது பாகுபாடு காட்டக் கூடாது என்று ஏற்கெனவே நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. அந்த உத்தரவை பின்பற்றியே நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்’ என்று அவா் கூறினாா். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தாா்.