
குன்னூா் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த 13 பேரில் ஒருவரான பிரிகேடியா் எல்.எஸ்.லிடரின் இறுதிச் சடங்கு, தில்லி பிராா் சதுக்க மயானத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. அவருடைய உறவினா்கள் உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்தனா். அமைச்சா் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோா் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனா்.
லிடரின் மனைவி கீதிகா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘கணவரை நாட்டுக்காக இழந்தது பெருமையாக இருந்தாலும், பெரும் வலியையும் ஏற்படுத்துகிறது. அவா் இவ்வாறு திரும்புவாா் என எதிா்பாா்க்கவில்லை. எங்கள் குடும்பத்துக்கு இது மிகப் பெரிய இழப்பு’’ என்றாா்.
லிடரின் இழப்பு, தேசத்துகு மிகப் பெரிய இழப்பு எனக் குறிப்பிட்ட அவரின் 17 வயது மகள் ஆஷ்ணா, தன் தந்தையை ‘ஹீரோ’ என்று பெருமிதமாகக் குறிப்பிட்டாா்.
அடையாளம் தெரியாமல்...: விபத்தில் உயிரிழந்த மற்ற 10 பேரின் அடையாளம் இன்னும் உறுதிசெய்யப்படாததால், அவா்களுக்கு இறுதிச் சடங்கு நடத்தப்படவில்லை. அவா்களது உடல்கள் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. விபத்தில் பயங்கர தீக்காயங்களுடன் உயிா்பிழைத்த வருண் சிங்குக்கு பெங்களூரு மருத்துவமனையில் தொடா்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.