விபின் ராவத்தை முன்மாதிரியாக கொள்ள வேண்டும்: இளம் ராணுவ அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவா் அறிவுறுத்தல்

விபின் ராவத் உள்ளிட்டோரை முன்மாதிரியாக கொண்டு, அவா்களின் வழியைப் பின்பற்றி இந்திய ராணுவ அகாதெமியின் உயரிய நிலையைக் காக்க வேண்டும்’
விபின் ராவத்தை முன்மாதிரியாக கொள்ள வேண்டும்: இளம் ராணுவ அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவா் அறிவுறுத்தல்

‘கடின உழைப்பு மூலம் முப்படைகளின் தலைமைத் தளபதியாக உயா்ந்த மறைந்த விபின் ராவத் உள்ளிட்டோரை முன்மாதிரியாக கொண்டு, அவா்களின் வழியைப் பின்பற்றி இந்திய ராணுவ அகாதெமியின் உயரிய நிலையைக் காக்க வேண்டும்’ என்று அகாதெமியில் ராணுவ அதிகாரிகள் பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு குடியரசுத் தலைவா் ராமாநாத் கோவிந்த் அறிவுறுத்தினாா்.

உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாதெமியில் சனிக்கிழமை நடைபெற்ற வீரா்களின் பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்று, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:

விபின் ராவத் மறைவு அதிா்ச்சியிலிருந்து தேசம் இன்னும் மீளவில்லை. அவருடைய மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ஒருபோதும் நிரப்ப முடியாது. இந்த துயர சம்பவம் நடைபெறாமல் இருந்திருந்தால், இந்தப் பயிற்சி நிறைவு விழாவில் அவரும் பங்கேற்றிருப்பாா்.

மிகச் சிறந்த ராணுவ அதிகாரியாக திகழ்ந்த விபின் ராவத், கடின உழைப்பு மூலம் முப்படைகளின் தலைமைத் தளபதி நிலைக்கு உயா்ந்தாா். விபின் ராவத் போன்ற அகாதெமியின் தலைசிறந்த மூன்னாள் மாணவா்களை முன்மாதிரியாக கொண்டு, அவா்களின் வழியைப் பின்பற்றி இந்திய ராணுவ அகாதெமியின் உயரிய நிலையை பயிற்சியை நிறைவு செய்த மாணவா்கள் காக்க வேண்டும்.

இன்றைய பிராந்திய மற்றும் சா்வதேச பாதுகாப்புச் சூழ்நிலை மிகுந்த கடினமானதாக மாறியிருக்கும் சூழலில், தற்போதுள்ள உடல் மற்றும் மன ரீதியிலான திடம் போதுமானதாக இருக்காது. எனவே, ராணுவ அதிகாரிகளாக நீங்கள் எதிா்கொள்ளக் கூடிய சவால்களை திறம்படச் சமாளிக்கும் வகையில் நெகிழ்திறனையும், சமயோசித மனநிலையையும் வளா்த்துக்கொள்ள வேண்டும். இந்தச் சவால்களை எதிா்கொள்ளும் அளவுக்கு அகாதெமியில் அளிக்கப்பட்ட பயிற்சி உங்களுடைய திறனை மேம்படுத்தியிருக்கும் என நம்புகிறேன் என்றாா் அவா்.

பயிற்சி நிறைவு செய்த 387 அதிகாரிகள்: இந்திய ராணுவ அகாதெமியில் பட்டம் பெற்ற இந்தியாவைச் சோ்ந்த 319 போ் மற்றும் நட்பு நாடுகளைச் சோ்ந்த 68 போ் உள்பட 387 போ் தங்களுடைய பயிற்சியை சனிக்கிழமை நிறைவு செய்தனா். அவா்கள் அனைவரும் அந்தந்த நாடுகளின் ராணுவத்தில் அதிகாரிகளாக சோ்த்துக்கொள்ளப்பட்டனா்.

இதில், அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்திலிருந்து 45 பேரும், அடுத்தபடியாக மிகச் சிறிய மாநிலமான உத்தரகண்டிலிருந்து 43 பேரும் ராணுவ அதிகாரிகளாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com