லக்கீம்பூர் வன்முறை திட்டமிட்ட சதி: சிறப்பு விசாரணைக் குழு

"லக்கீம்பூர் கெரி வன்முறையானது மரணத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் திட்டமிடப்பட்ட சதி' என்று கூறியுள்ள சிறப்பு விசாரணைக் குழு, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மீதான குறைந்தபட்
லக்கீம்பூர் வன்முறை திட்டமிட்ட சதி: சிறப்பு விசாரணைக் குழு


லக்கீம்பூர் கெரி: "லக்கீம்பூர் கெரி வன்முறையானது மரணத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் திட்டமிடப்பட்ட சதி' என்று கூறியுள்ள சிறப்பு விசாரணைக் குழு, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மீதான குறைந்தபட்ச குற்றச்சாட்டுகளை கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதியிடம் செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டது.
உத்தர பிரதேச மாநிலம், லக்கீம்பூர் கெரியில் கடந்த அக்டோபர் 3-இல் விவசாயிகளின் பேரணியில் வாகனம் மோதியதில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா, சுமித் ஜெய்ஸ்வால், அங்கித் தாஸ் உள்ளிட்ட 13 பேரை கைது செய்தனர்.
இதே வன்முறையில் பாஜக தரப்பிலும் சிலர் உயிரிழந்ததால், பாஜக நிர்வாகி அளித்த புகாரின்பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த இரு வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை உத்தர பிரதேச அரசு அமைத்தது.
இந்நிலையில், 8 பேரை பலி கொண்ட லக்கீம்பூர் வன்முறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மீது பதிவு செய்யப்பட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 279 (அலட்சியத்துடன் வாகனம் ஓட்டுதல்), 338 (அலட்சியத்தால் கடுமையான காயங்களை ஏற்படுத்துதல்), 304ஏ (அலட்சியத்தால் மரணத்தை விளைவித்தல்) ஆகிய சட்டப் பிரிவுகளுக்குப் பதிலாக இந்திய தண்டனைச் சட்டம் 307 (கொலை முயற்சி) உள்ளிட்ட தீவிர குற்றப் பிரிவின்கீழ், குற்றச்சாட்டைப் பதிவு செய்யுமாறு தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிந்தாராமிடம் சிறப்பு விசாரணைக் குழு தலைவர் வித்யாராம் திவாகர் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தார். மேலும், இந்த வன்முறையானது மரணத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்றும் விசாரணைக் குழு கூறியுள்ளது.
அதேவேளையில் 13 பேர் மீது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302 (கொலை), 147 (கலவரம்), 148 (கலவரம், கொடிய ஆயுதத்துடன் கூடுதல்) உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் மீது எவ்வித ஆட்சேபமும் சிறப்பு விசாரணைக் குழு தெரிவிக்கவில்லை. 
கைது செய்யப்பட்ட 13 பேரும் தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரிக்க உத்தர பிரதேச அரசு முதலில் 9 பேர் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழுவை அமைந்தது. பின்னர், உச்சநீதிமன்றம் தலையிட்டு இந்தக் குழுவை மாற்றியமைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com