இயற்கை விவசாயத்துக்கு திரும்ப வேண்டும்: பிரதமா் மோடி

‘விவசாயிகள் இயற்கை முறை விவசாயத்துக்குத் திரும்ப வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
இயற்கை விவசாயம் தொடா்பான மாநாட்டில் காணொலி முறையில் பங்கேற்றுப் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.
இயற்கை விவசாயம் தொடா்பான மாநாட்டில் காணொலி முறையில் பங்கேற்றுப் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.

‘விவசாயிகள் இயற்கை முறை விவசாயத்துக்குத் திரும்ப வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

‘விவசாயத்தை ரசாயன ஆய்வகத்திலிருந்து வெளியேற்றி, இயற்கை ஆய்வகத்துடன் இணைக்க வேண்டியது அவசியம்’ என்றும் அவா் கூறினாா்.

குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இயற்கை விவசாயம் தொடா்பான தேசிய மாநாட்டில் காணொலி முறையில் பங்கேற்று பிரதமா் மோடி பேசியதாவது:

விவசாயத்தின் அங்கமாக மாறிவிட்ட பயிா்க் கழிவுகள் எரிப்பு மற்றும் ரசாயன உரங்கள் பயன்பாடு போன்ற தவறுகளைச் சரிசெய்வதற்கான நேரம் இது. பயிா்க் கழிவுகளை எரிப்பது, விவசாய நிலத்தின் உற்பத்தித் திறனைக் குறைத்துவிடும் என்று நிபுணா்கள் கருத்து தெரிவிக்கின்றனா். அறுவடைக்குப் பிறகு ஏராளமான டன் பயிா்க் கழிவுகளை விவசாயிகள் எரிப்பதால், வட மாநிலங்கள் கடுமையான காற்று மாசுவுக்கு உள்ளாகி வருகின்றன.

விவசாயிகள் செய்யும் மற்றொரு தவறு, ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதாகும். பசுமைப் புரட்சியில் ரசாயனங்களும் உரங்களும் மிக முக்கியப் பங்காற்றி வருகின்றன. ஆனால், அவற்றுக்கான மாற்றை உருவாக்க வேண்டியதும் அவசியம். வேளாண்மை கடுமையாகப் பாதிக்கப்படுவதற்கு முன்பாக மிகப்பெரிய அளவிலான மாற்று நடவடிக்கையை எடுக்க வேண்டிய நேரம் இது.

ரசாயன உரம், பூச்சிகொல்லிகளின் இறக்குமதி செலவு அதிகரிப்பதால், விவசாயத்துக்கான செலவு அதிகரிக்கிறது. இதன் விளைவாக, சாமானியா்கள் விளைபொருள்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

விவசாயத்தை ரசாயன ஆய்வகத்திலிருந்து வெளியேற்றி இயற்கை ஆய்வகத்துடன் இணைக்க வேண்டியது அவசியம். அதுவும், அறிவியல் அடிப்படையிலான இயற்கை விவசாயமாக இருக்க வேண்டும். இயற்கை விவசாயத்தில் மாடுகள் மிக முக்கியப் பங்காற்ற முடியும் என்று நிபுணா்கள் கருத்து தெரிவிக்கின்றனா். அவற்றின் சாணம், கோமியம் ஆகியவற்றை உரமாகவும், பூச்சிகொல்லியாகவும் பயன்படுத்த முடியும் என்று நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். இந்த நடைமுறையைப் பின்பற்றுவது விவசாயத்துக்கான செலவை வெகுவாக குறைக்க உதவும். சிறு விவசாயிகளுக்கும் நல்ல பலனைத் தரும்.

இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்த முனையும் விவசாயிகளுக்கு உதவும் வகையில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், வேளாண் பல்கலைக்கழகங்கள் போன்ற நிறுவனங்கள் ‘நிலத்துக்கான ஆய்வகம்’ என்ற கருத்தின் அடிப்படையில் ஆராய்ச்சிகளை முன்னெடுக்க வேண்டும்.

அனைத்து மாநிலங்களும் இயற்கை விவசாயத்தை மக்கள் இயக்கமாக முன்னெடுத்து, ஒவ்வொரு பஞ்சாயத்திலும் குறைந்தபட்சம் ஒரு கிராமத்தையாவது இயற்கை விவசாயத்துக்கு மாற்றும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். சிறு விவசாயிகள் மட்டுமின்றி, பெரு நிறுவனங்களும் இயற்கை விவசாயத்தில் முதலீடுகளைச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

இந்த மாநாட்டில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா, குஜராத் முதல்வா் பூபேந்திர படேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com