பெகாஸஸ் விவகாரம்: மேற்குவங்க அரசு அமைத்த விசாரணை ஆணையத்திற்கு தடை

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி லோகூர், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஜோதிர்மய் பட்டாச்சார்யா ஆகியோர் கொண்ட விசாரணை ஆணையத்தை மேற்கு வங்க அரசு கடந்த மாதம் அமைத்தது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

பெகாஸஸ் விவகாரத்தை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.பி. லோகூர் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை மேற்குவங்க அரசு அமைத்தது. இந்நிலையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள இந்த ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்த விவகாரத்தை விசாரணை ஆணையம் விசாரிக்காது என மேற்குவங்க அரசு உத்தரவாதம் அளித்திருந்தது. இருப்பினும், லோகூர் தலைமையிலான ஆணையம் விசாரணையை தொடங்கியது. இந்த சூழலில், இதை கருத்தில் கொண்ட, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்யா காந்த், ஹிமா கோலி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இஸ்ரேல் நிறுவனம் தயாரித்த பெகாஸஸ் என்ற மென்பொருளை கொண்டு பல்வேறு தரப்பினர் வேவு பார்க்கப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியானது. குறிப்பாக, எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர் உளவு பார்ப்பதற்கான பட்டியலில் இருந்ததாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், மூன்று பேர் கொண்ட சைபர் நிபுணர்கள் அடங்கிய விசாரணைக்குழுவை அக்டோபர் 27ஆம் தேதி அமைத்தது. "தனியுரிமை மீறலுக்கு எதிராக அனைத்து குடிமக்களும் பாதுகாக்கப்பட வேண்டும். தேசிய பாதுகாப்பை அரசு காரணமாக சுட்டி காட்டுவதை நீதிமன்றம் மெளனமாக பார்த்து கொண்டிருக்காது" என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி லோகூர், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஜோதிர்மய் பட்டாச்சார்யா ஆகியோர் கொண்ட விசாரணை ஆணையத்தை மேற்கு வங்க அரசு கடந்த மாதம் அமைத்தது.

பெகாஸஸ் மென்பொருளை பயன்படுத்தி உளவு பார்ப்பதற்கான பட்டியலில் உறுதிபடுத்தப்பட்ட 300 இந்தியர்களின் செல்போன் எண்கள் இருந்ததாக சர்வதேச நாளிதழ்கள் புலனாய்வு கட்டுரைகள் வெளியிட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com