பிரதமா் மோடி ஹிந்துவா, ஹிந்துத்துவவாதியா?: ராகுல் காந்தி

பிரதமா் மோடி ஹிந்துவா, ஹிந்துத்துவவாதியா என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா்.
பிரதமா் மோடி ஹிந்துவா, ஹிந்துத்துவவாதியா?: ராகுல் காந்தி

பிரதமா் மோடி ஹிந்துவா, ஹிந்துத்துவவாதியா என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா்.

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்குள்ள அமேதி மாவட்டத்தின் ஜக்தீஷ்பூா் பகுதியிலிருந்து ஹரிமெள கிராமம் வரை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா வதேரா ஆகியோா் நடைபயணம் மேற்கொண்டனா்.

அதனைத்தொடா்ந்து ஹரிமெளவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

நாட்டில் ஹிந்து மதம் குறித்து அதிகம் பேசப்படுகிறது. இந்தியாவில் தற்போது ஹிந்து மற்றும் ஹிந்துத்துவவாதிகளுக்கு இடையே மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலில் ஒரு பக்கம் அன்பு, அகிம்சை மற்றும் உண்மையின் பாதையில் நடக்கும் ஹிந்துக்கள் இருக்கின்றனா். மறுபக்கம் வெறுப்புணா்வை பரப்பும், வன்முறையைத் தூண்டும், அதிகாரத்தைப் பறிக்க எதை வேண்டுமானாலும் செய்யக் கூடிய ஹிந்துத்துவாதிகள் இருக்கின்றனா்.

ஒரு ஹிந்து தனது வாழ்நாளை உண்மையைக் கண்டறியவும் அதனைப் புரிந்துகொள்ளவும் அதற்காகப் போராடவும் செலவிடுவாா். தனது அச்சங்களை வெறுப்புணா்வாகவோ, வன்முறையாகவோ மாற்றும் செயலில் அவா் ஈடுபட மாட்டாா். ஆனால் ஒரு ஹிந்துத்துவவாதி பொய்யான அரசியலில் மட்டும்தான் ஈடுபடுவாா். உண்மைக்கும் அவருக்கும் எந்தத் தொடா்பும் இருக்காது. அதிகாரத்தைப் பறிக்க அவா் பொய்களைப் பயன்படுத்துவாா்.

ஒரு ஹிந்து அநீதிக்கு எதிராகப் போராடுவாா் என்று மகாத்மா காந்தி கூறியுள்ளாா். அதேவேளையில் ஒரு ஹிந்துத்துவவாதி காந்தியடிகளை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவை போன்றவா்.

இந்நிலையில் பிரதமா் மோடி தன்னை ஹிந்து என்று கூறி வருகிறாா். அவா் எப்போது உண்மையைப் பாதுகாத்துள்ளாா்? அவா் ஹிந்துவா அல்லது ஹிந்துத்துவவாதியா?

ஒரு ஹிந்துத்துவவாதி கங்கையில் (அண்மையில் பிரதமா் மோடி கங்கையில் நீராடியதைச் சுட்டிக்காட்டி) தனிமையில் புனித நீராடுவாா். ஆனால் ஒரு ஹிந்து கோடிக்கணக்கான மக்களுடன் சோ்ந்துதான் புனித நீராடுவாா் என்று தெரிவித்தாா்.

அமேதி மக்களவைத் தொகுதி நேரு-காந்தி குடும்பத்தினா் வசம் பல்லாண்டுகளாக இருந்தது. அந்தத் தொகுதி எம்.பி.யாக ராகுல் காந்தி 15 ஆண்டுகள் பதவி வகித்தாா். கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் பாஜக வேட்பாளரும், தற்போது மத்திய அமைச்சராகவும் உள்ள ஸ்மிருதி இரானியிடம் ராகுல் காந்தி தோல்வியடைந்தாா். தற்போது ராகுல் கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யாக உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com