கதையல்ல.. நிஜம்: மாதம் ரூ.20,000 சம்பாதிக்கும் சூரத் சிறைக் கைதிகள்

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள சூரத் சிறைச்சாலைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. என்ன சிறைச்சாலைக்கு வரவேற்கிறீர்களா என்று நினைக்க வேண்டாம்.
மாதம் ரூ.20,000 சம்பாதிக்கும் சூரத் சிறைக் கைதிகள்
மாதம் ரூ.20,000 சம்பாதிக்கும் சூரத் சிறைக் கைதிகள்


அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள சூரத் சிறைச்சாலைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. என்ன சிறைச்சாலைக்கு வரவேற்கிறீர்களா என்று நினைக்க வேண்டாம்.

நாட்டில் கூட்ட நெரிசலான, மிகப் பழமையான கட்டங்கள் போல அல்லாமல், வெகு நவீன சிறைக்கூடமாக அமைந்துள்ளது இந்த சூரத் சிறைச்சாலை.

இந்த மிக ஆடம்பரமான கட்டடத்தைப் பார்க்கும்போதே, இந்த சிறைச்சாலைக்குள் செல்லும் கைதிகள் பெரும்பாலும் தண்டனை முடிந்து வெளியே வரும்போது நிச்சயம் ஒரு மனமாற்றத்தைப் பெற்றே திரும்புவார்கள் என்று உறுதியான எண்ணம் ஏற்படுகிறது. இந்த கட்டடம், வெறும் சிறைக்கூடமாக இல்லாமல், கல்வி கற்பதற்கு போதுமான வசதி, கைத்தொழில் கற்றுக் கொடுக்கும் கல்லூரியாகவும், வருவாய் ஈட்டும் வாய்ப்பை வழங்கும் தொழிற்சாலையாகவும் பல அவதாரங்களைக் கொண்டுள்ளது.

அந்நியன் போல, இது வெளியிலிருந்து பார்த்தால் சிறைக்கூடம், உள்ளே இருப்பவர்களுக்கோ தொழிற்சாலை, கல்லூரி என்று சொல்லுமளவுக்கு செயல்பட்டு வருகிறது.

சிறைத் துறை அதிகாரிகளின் முன்னெடுப்பு நடவடிக்கைகளின்படி, இங்கு அமைக்கப்பட்டிருக்கும் தொழிற்சாலைகள் வாயிலாக, சிறைக்கைதிகள் மாதம் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார்கள். குற்றம் செய்துவிட்டு சிறையில் தண்டனையை அனுபவிக்கும் போதும் கூட, அவர்கள் தங்களது குடும்பத்துக்காக உழைத்த சம்பாதிக்க வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருப்பது, அவர்கள் மனம்திருந்தி வாழ நல்வாய்ப்பாக அமைகிறது.

லஜ்போர் சிறையில், ஆண் கைதிகள், வைரக் கற்களை பட்டைத்தீட்டும் பணியிலும், பெண் கைதிகள் சேலைகளை அலங்கரிப்பது போன்ற பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த வைரக் கற்கள் தொழிற்சாலை 2017ஆம் ஆண்டு முதல் சயல்பட்டு வருகிறது. தற்போதுதான் முழுமையாகச் செயல்படத் தொடங்கியிருக்கிறது என்கிறார்கள் சிறை நிர்வாகிகள்.

வைரத் தொழிற்சாலையிலிருந்து குறிப்பிட்ட அளவு வைரக் கற்கள் இங்கு அனுப்பி வைக்கப்படும். அவை பட்டைத்தீட்டப்பட்டு, தேவையான வடிவில் வெட்டப்பட்டு இங்கிருந்து அனுப்பிவைக்கப்படும்.

சிறைக் கைதிகளின் ஊதியம் முழுக்க அவர்களது வங்கிக் கணக்கில் மாதந்தோறும் வரவு வைக்கப்பட்டுவிடும். அது மட்டுமல்லாமல், இங்கு சிறைக் கைதிகளுக்கு வைரம் பட்டை தீட்டுவதில் பல்வேறு நிபுணத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. இங்கு வைரம் பட்டைத்தீட்டும் தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றும் சிறைக் கைதி மஞ்ஜி ஜாதவின் ஒரு மாத ஊதியம் ரூ.20,000.

அது மட்டுமல்ல, படிக்கும் ஆர்வம் கொண்ட சிறைக் கைதிகள் படிக்கவும், ஆன்லைன் மூலம் கல்வி கற்கவும் கூட ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. ஆடியோ -  விடியோ நூலகம் மட்டுமல்லாமல், புத்தக நூலகமும் இங்குள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com