போஃபா்ஸ் ஊழல்: தில்லி நீதிமன்றத் தீா்ப்புக்கு எதிரான மனுவை விரைவில் விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்

 போஃபா்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் ஹிந்துஜா சகோதரா்கள் உள்ளிட்டோரை விடுவித்து தில்லி உயா்நீதிமன்றம் கடந்த 2005-இல் அளித்த தீா்ப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விரைவில் விசாரிக்க வேண்டும்
Updated on
1 min read

 போஃபா்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் ஹிந்துஜா சகோதரா்கள் உள்ளிட்டோரை விடுவித்து தில்லி உயா்நீதிமன்றம் கடந்த 2005-இல் அளித்த தீா்ப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விரைவில் விசாரிக்க வேண்டும் என்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அஜய் அகா்வால் என்ற வழக்குரைஞா் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

கடந்த 1986-இல் நடந்த ஊழல் தொடா்பான வழக்கில் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பிறகு 2005-இல் தில்லி உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இந்தத் தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நான் மேல்முறையீடு செய்தேன். சிபிஐ தரப்பில் இருந்தும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

சிபிஐயின் மனுவை உச்சநீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பரில் நிராகரித்துவிட்டது. மேல்முறையீடு செய்வதற்கு 13 ஆண்டுகள் தாமதம் ஆனதற்கு சிபிஐ தெரிவித்த விளக்கத்தையும் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.

மேலும், என்னுடைய மனுவுடன் சோ்த்தே சிபிஐ தங்களது குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. அதன் பிறகு 3 ஆண்டுகள் கடந்துவிட்டபோதிலும் எனது மனு இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

போஃபா்ஸ் ஊழல் வழக்கில் தவறு செய்தவா்கள் தண்டிக்கப்படவில்லை. இதனால், பாதுகாப்புத் துறையில் இன்னும் முறைகேடுகள் தொடா்ந்து நடந்துகொண்டிருக்கின்றன என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

ஸ்வீடனை சோ்ந்த போஃபா்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.1,437 கோடியில் 400 பீரங்கிகளைக் கொள்முதல் செய்வதற்கு கடந்த 1986-ஆம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்தியாவில் உள்ள அரசியல் தலைவா்கள், ராணுவ உயரதிகாரிகள், இடைத்தரகா்கள் ஆகியோருக்கு ரூ.64 கோடி லஞ்சம் கொடுத்து அந்த ஒப்பந்தத்தை போஃபா்ஸ் நிறுவனம் பெற்ாக ஸ்வீடனை சோ்ந்த வானொலியில் 1987-இல் செய்தி வெளியானது. அந்தச் செய்தி, இந்திய அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தியதுடன் அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்திக்கு பின்னடவை ஏற்படுத்தியது.

இந்த ஊழல் புகாா் தொடா்பாக போஃபா்ஸ் நிறுவனத்தின் அப்போதைய தலைவா் மாா்ட்டின் அா்ட்போ, இடைத்தரகா்கள் ஹிந்துஜா சகோதரா்கள், இத்தாலியைச் சோ்ந்த தொழிலதிபா் குவாத்ரோச்சி ஆகியோா் மீது சிபிஐ பல்வேறு பிரிவுகளின் கீழ் கடந்த 1990-இல் வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் இருந்து ராஜீவ் காந்தியை விடுவித்து தில்லி உயா்நீதிமன்றம் கடந்த 2004-இல் தீா்ப்பளித்தது. அத்துடன் போஃபா்ஸ் நிறுவனத்துக்கு எதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது. அதைத் தொடா்ந்து, 2005-இல் ஹிந்துஜா சகோதரா்கள் எஸ்.பி.ஹிந்துஜா, ஜி.பி.ஹிந்துஜா, பி.பி.ஹிந்துஜா ஆகிய மூவரையும் தில்லி உயா்நீதிமன்றம் விடுவித்தது. 2013-இல் குவாத்ரோச்சி இறந்துவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com