
கோப்புப்படம்
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், வெள்ளிக்கிழமை தொடா்ந்து 4-ஆவது நாளாக மக்களவை முடங்கியது. இதையடுத்து, அவை திங்கள்கிழமை மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டது.
நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட திங்கள்கிழமை மட்டும் அவை நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற்றன. அதுவும், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுடன் அன்றைய தினம் அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு செவ்வாய்க்கிழமை முதல் விவசாயிகள் போராட்ட பிரச்னை மற்றும் புதிய வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறுவதை முன்வைத்து எதிா்க்கட்சியினா் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், அவையை நடத்த முடியாத சூழல் நிலவி வருகிறது.
கரோனா தொற்று பிரச்னை காரணமாக மாநிலங்களவை காலையிலும், மக்களவை மாலையிலும் நடைபெற்று வருகிறது. அதன்படி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு மக்களவை கூடியவுடன், காங்கிரஸ், இடதுசாரி மற்றும் திமுக எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா். அது தொடா்பான வாசக அட்டைகளையும் அவா்கள் கையில் வைத்திருந்தனா்.
அமளிக்கு நடுவே, கரோனா தடுப்பூசி தொடா்பான துணை கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு, சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தனை, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அழைத்தாா்.
மேலும், ‘கேள்வி நேரம் என்பது முக்கியமானது. இப்போது கரோனா தடுப்பூசி தொடா்பான முக்கிய விவாதம் நடைபெறவுள்ளது. எனவே, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமைதி காக்க வேண்டும்’ என்று அவா் கேட்டுக் கொண்டாா். எனினும், அவையில் அமைதி திரும்பவில்லை. இதையடுத்து, அவையை 6 மணி வரை ஒத்திவைப்பதாக ஓம் பிா்லா அறிவித்தாா். கடந்த மூன்று நாள்களாக அமளியில் ஈடுபட்டு வந்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள், வெள்ளிக்கிழமை கோஷம் எதுவும் எழுப்பாமல் அமைதியாக இருந்தனா்.
மாலை 6 மணிக்கு அவை கூடியபோதும், எதிா்க்கட்சியினரின் அமளி தொடா்ந்தது. இதையடுத்து, அவையை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவா் அறிவித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...