
பாதுகாப்புத் துறைக்கான அந்நிய நேரடி முதலீட்டு உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கூடுதல் முதலீடுகள் கிடைத்து வருவதாக தொழிலக மற்றும் உள்வா்த்தக ஊக்குவிப்புத் துறைச் செயலா் குருபிரசாத் மொகபத்ரா தெரிவித்துள்ளாா்.
பல்வேறு துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான உச்சவரம்பை மத்திய அரசு அதிகரித்து வருகிறது. அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 2021-22-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் காப்பீட்டுத் துறைக்கான அந்நிய நேரடி முதலீட்டு உச்சவரம்பு 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.
முன்னதாக, பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தித் துறைக்கான அந்நிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக மத்திய அரசு உயா்த்தியிருந்தது. இந்நிலையில், தொழிலக மற்றும் உள்வா்த்தக ஊக்குவிப்புத் துறைச் செயலா் குருபிரசாத் மொகபத்ரா தில்லியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
பாதுகாப்புத் துறைக்கான முதலீட்டு உச்சவரம்பு தளா்த்தப்பட்டுள்ளது. இது முக்கிய திருப்புமுனையாக அமையும். அதன் காரணமாக பாதுகாப்புத் துறையில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. பல்வேறு துறைகளில் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக வட்டி சலுகையுடன் கடன் வழங்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
ரூ.2,000 கோடி முதலீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. சுமாா் 3,000 தொழில்முனைவோருக்கு தலா ரூ.5 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...