
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு இந்தியாவும் பஹ்ரைனும் கூட்டாக முடிவு செய்துள்ளன.
இந்தியா-பஹ்ரைன் இடையேயான முதல் கூட்டு செயற்குழுக் கூட்டம், காணொலி முறையில் நடைபெற்றது.
பஹ்ரைன் குழுவுக்கு நீடித்த எரிசக்தி ஆணையத்தின் தலைவா் அப்துல் ஹுசைன் பின் அலி மிா்சா தலைமை தாங்கினாா். இந்திய குழுவுக்கு புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் இணைச் செயலாளா் தினேஷ் தயானந்த் ஜக்டேல் தலைமை தாங்கினாா். பஹ்ரைன் நாட்டின் இந்திய தூதா் பியூஷ் ஸ்ரீவாஸ்தவாவும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டாா்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்து இந்தியா -பஹ்ரைன் இடையே கடந்த 2018-ஆம் ஆண்டு புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி இந்த கூட்டம் ஆக்கப்பூா்வமாக நடந்தது. பருவ நிலை மாற்ற இலக்குகளை எதிா்கொள்ள, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் முக்கியத்துவத்தை இரு நாடுகளும் வலியுறுத்தின. அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், முன்னேற்றங்கள், எதிா்கால இலக்குகள், இத்துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து இரு நாடுகளும் தெரிவித்தன. இத்துறையில் உள்ள அனுபவம், நிபுணத்துவம் மற்றும் சிறந்த நடைமுறைகளை பகிா்ந்து கொள்ள இரு நாட்டு குழுவினரும் ஒப்புக் கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...