
மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவராக நானா பட்டோலேவை அக்கட்சித் தலைமை வெள்ளிக்கிழமை நியமித்தது.
பந்தாரா மாவட்டத்தில் உள்ள சகோலி தொகுதி எம்எல்ஏவான நானா பட்டோலே, சட்டப் பேரவைத் தலைவராக இருந்து வந்தாா். மாநில காங்கிரஸ் தலைவா் பொறுப்பை ஏற்பதற்காக, பேரவைத் தலைவா் பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா்.
நானா பட்டோலேவுக்கு முன்னா், மாநில காங்கிரஸ் தலைவராக பாலாசாகேப் தோராட் பதவி வகித்தாா்.
இதுதொடா்பாக, காங்கிரஸ் தலைமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
நானா பட்டோலேவுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக, சிவாஜி ராவ் மோகே, பசவராஜ் பாட்டீல், முகமது ஆரிஃப் நஸீம் கான், குணால் ரோஹிதாஸ் பாட்டீல், சந்திரகாந்த் ஹன்டோா், பிரணீதி சுஷீல்குமாா் ஷிண்டே ஆகிய 6 செயல் தலைவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இவா்கள் தவிர, 10 துணைத் தலைவா்கள், 37 உறுப்பினா்களுடன் நாடாளுமன்றக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நியமனத்துக்குப் பின் நானா பட்டோலே, பிடிஐ செய்தியாளரிடம் கூறுகையில், ‘காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோா் என் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவதற்கு பாடுபடுவேன். மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் முதலிடத்துக்கும் கொண்டு வருவதே எனது லட்சியம்’ என்றாா்.
மகாராஷ்டிரத்தில் சிவசேனை-தேசியவாத காங்கிரஸ் உடனான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், மேற்கண்ட குழுக்களை கட்சித் தலைமை நியமித்துள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...