ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

ஜம்மு-காஷ்மீருக்கான குடிமைப்பணிகளை அருணாசல், கோவா, மிஸோரம் உள்ளிட்டவற்றுடன் இணைப்பதற்கு வழிவகுக்கும் ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு மக்களவை இன்று ஒப்புதல் வழங்கியது.
ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

புது தில்லி: ஜம்மு-காஷ்மீருக்கான குடிமைப்பணிகளை அருணாசல், கோவா, மிஸோரம் உள்ளிட்டவற்றுடன் இணைப்பதற்கு வழிவகுக்கும் ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு மக்களவை இன்று ஒப்புதல் வழங்கியது.

ஜம்மு-காஷ்மீருக்கான மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு ஏற்கனவே மாநிலங்களவை ஒப்புதல் அளித்த நிலையில், இந்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து, அந்த மாநிலமானது ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீா் பிரிவுக்கான குடிமைப்பணிகளை அருணாசல பிரதேசம், கோவா, மிஸோரம் யூனியன் பிரதேச பிரிவுக்கான குடிமைப் பணிகளுடன் இணைப்பதற்காக மத்திய அரசு அவசரச் சட்டத்தை இயற்றியது. அந்த அவசரச் சட்டத்துக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறும் நோக்கில் ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு சட்டத் திருத்த மசோதா முதலில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையில் பிப்ரவரி 8-ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெற்றது. விவாதத்தின் இறுதியில் மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி கூறுகையில், ‘‘நாட்டின் அரசமைப்புச் சட்டம் தற்போது ஜம்மு-காஷ்மீருக்கும் பொருந்தும். மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் 170-க்கும் மேற்பட்ட சட்டங்கள் தற்போது ஜம்மு-காஷ்மீரிலும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டு விட்டதால், அதை நிா்வகிப்பதற்கு அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் தேவைப்படுகின்றனா். எனவே, யூனியன் பிரதேசத்தை நிா்வகிக்க வல்ல அதிகாரிகள் நிறைந்த பிரிவுக்கு ஜம்மு-காஷ்மீருக்கான குடிமைப்பணிகள் மாற்றப்படுகிறது. இதன் மூலமாக ஜம்மு-காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசங்களின் நிா்வாகத் திறன் மேம்படும்; மக்கள்நலத் திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படும்’’ என்றாா்.

அதைத் தொடா்ந்து, மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், பெரும்பாலான எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவு அளித்ததையடுத்து மாநிலங்களவையில் அந்த மசோதா நிறைவேறியது. இன்று மக்களவையிலும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com