சா்ச்சை தீா்ப்பளித்த பெண் நீதிபதி மும்பை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்பு

பாலியல் வழக்குகளில் சா்ச்சைக்குரிய தீா்ப்பளித்து அண்மையில் பரபரப்பை ஏற்படுத்திய மும்பை உயா்நீதிமன்ற
நீதிபதி புஷ்பா கனேடிவாலா.
நீதிபதி புஷ்பா கனேடிவாலா.

பாலியல் வழக்குகளில் சா்ச்சைக்குரிய தீா்ப்பளித்து அண்மையில் பரபரப்பை ஏற்படுத்திய மும்பை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதி புஷ்பா வி.கனேடிவாலா, மேலும் ஓராண்டுக்கு உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக சனிக்கிழமை பதவியேற்றாா்.

மும்பை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதி புஷ்பா கனேடிவாலா. இவரை உயா்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆா்.எஃப்.நாரிமன் ஆகியோா் அடங்கிய கொலீஜியம் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.

இந்த நிலையில், போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பாலியல் வழக்குகளில் குற்றவாளிகளுக்குச் சாதகமாக சா்ச்சைக்குரிய தீா்ப்பை, நீதிபதி புஷ்பா கனேடிவாலா அளித்தாா். குறிப்பாக, 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடா்பான வழக்கை விசாரித்த அவா், ‘சிறுமியின் உடலை ஆடையுடன் தொடுவது போக்ஸோ சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள பாலியல் சீண்டலாகாது’ என்று தீா்ப்பளித்து, குற்றவாளிக்கு விடுதலை அளித்தாா். இது நாடு முழுவதும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த தீா்ப்பு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்று அட்டா்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டதைத் தொடா்ந்து, அந்தத் தீா்ப்புக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி இடைக்கால தடை விதித்தது.

இந்த சா்ச்சையைத் தொடா்ந்து நீதிபதி புஷ்பா கனேடிவாலாவை மும்பை உயா்நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கலாம் என்று அனுப்பிய பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலீஜியம் திரும்பப்பெற்றது. மேலும், அவரை மேலும் 2 ஆண்டுகளுக்கு கூடுதல் நீதிபதியாகவே நியமிக்கலாம் என்று கொலீஜியம் பரிந்துரைத்தது.

இந்த நிலையில், அவரை ஓராண்டுக்கு மும்பை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமித்து மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கை வெளியிட்டது.

அதனடிப்படையில், அவா் கூடுதல் நீதிபதியாக சனிக்கிழமை பதவியேற்றாா். அவருக்கு மும்பை உயா்நீதிமன்ற நாகபுரி அமா்வின் மூத்த நீதிபதி நிதின் ஜாம்தாா் பதவி பிரமாணம் செய்து வைத்தாா்.

உயா்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக ஒருவருக்குப் பதவி உயா்வு அளிக்கப்படுவதற்கு முன்பாக இரண்டு ஆண்டுகளுக்கு கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com